மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சியை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டஙாகளை கையிலெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழகத்தின் 38வது மாவட்டம்


தமிழ்நாடில் கடைசியாக பிரிக்கப்பட்ட 38வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து முழுமையாக இங்கு செயல்பட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும் இயங்கியது. 




வளர்ச்சி பணிகள் 


மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டடம் கட்டுமான பணிகளும் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் தொடங்கப்பட்டுள்ளது.




சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், மணக்குடி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகிறது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் தற்போது நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.




ஊராட்சிகள் இணைப்பு 


அதனடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சியை ஒட்டியுள்ள ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சி ஆகிம இரு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதனை அறிந்த இரண்டு ஊராட்சி பொதுமக்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன் எடுத்துள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியுடன், மன்னம்பந்தல் ஊராட்சியில் நகராட்சி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள பகுதிகளையும், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியையும் நகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.




அந்த அறிவிப்பை தொடர்ந்து மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் 300-க்கு மேற்பட்டோர் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம், ரூரல் ஊராட்சியில் 85 சதவீத மக்கள் விவசாய கூலி மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும், நகராட்சியுடன் இணைத்தால் அவர்கள் வேலை இழப்பிற்கும் ஆளாக நேரிடும் என்பதால் ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என ஆட்சேபனை மனு அளித்தனர்.




ஊராட்சி அலுவலகம் முற்றுகை 


இந்நிலையில், ரூரல் ஊராட்சியில் கிராமமக்கள் 100-க்கு மேற்பட்டோர் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கைகளில் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டவாறு வந்த கிராமமக்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராமமக்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.




சமூக ஆர்வலர்கள் கண்டனம் 


இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; மயிலாடுதுறை ரூரல் மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சிகளை நகராட்சி யுடன் இணைத்து மயிலாடுதுறை யை விரிவாக்கம் செய்யும் பொறுப்பை அரசு எடுத்து உள்ளது. எடுக்கக் கூடிய இரண்டு ஊராட்சிகளின் தலைவர்களுமே தலித்துகள். தனித் தொகுதிகள். ஏன் மூவலூர், சித்தர்காடு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வில்லை. நல்லத்துக்குடி, மற்றும் சீனிவாசபுரம் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வில்லை. திமுக ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இருப்பதாலா? மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் சுமார் 65 சதவீதம் தலித்துகளும், 25 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் விவசாய கூலிகள். பெரும்பாலான பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள். நகராட்சியுடன் இணைக்கப் பட்டால் தங்கள் வருமானத்தை இழப்பார்கள். கிராமப்புறங்களில் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இழப்பார்கள். 




வீட்டு வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை வரி, சொத்து வரி என பல வரிகள் விதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வருமானத்தை இழக்க நேரிடும். ஊராட்சியில் உள்ள நிலங்கள், நகராட்சிக்கு மாற்றப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப் பட நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிலங்களையும், கிராமபுற வேலை வாய்ப்புகளையும், தனித் தொகுதி அந்தஸ்து களையும் பறிக்கும் மறைமுக திட்டம் தான் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது என தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.