சீர்காழியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்  மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு திருமணம் செய்து வைக்குமாறு அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.


உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாலுக்காவில், "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசு அலுவலங்களில் ஆய்வினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மேற்கொண்டார். தொடர்ந்து. சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈடுபட்டார். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். சீர்காழி வட்டத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 




மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி 


கூட்டத்தின் போது சீர்காழியை சேர்ந்த 34 வயதான மாற்றுத்திறனாளி வினோத் என்பவர் ஆட்சியரை சந்தித்து தனது வாழ்வாதாரத்திற்காக வங்கி கடன் பெற்று தருமாறு ஆட்சியர் மகாபாரதியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் வங்கி கடன் பெறுவதற்காக சீர்காழி தென்பாதியில் உள்ள இந்தியன் வங்கியினை பலமுறை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்கள் வங்கி கடன் வழங்காமல், பல்வேறு ஆவணங்களை கேட்டு தன்னை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தற்போது, வாழ்வதா? சாவதா? என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என ஆட்சியரிடம் தனது மனவேதனையை வெளிப்படுத்தினர்.





வங்கி கடன் வழங்க நடவடிக்கை 


அதனைத் தொடர்ந்து உடனடியாக தென்பாதி இந்தியன் வங்கி கிளை மேலாளரை கூட்டத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாற்றுத்திறனாளி வினோதிற்கு வங்கி கடன் ஏன்? வழங்கப்படவில்லை என கேட்டார். அப்போது வங்கி மேலாளர் இது தொடர்பாக இதுவரை வங்கியில் அவர் விண்ணப்பம் செய்யவில்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக வங்கிக்கு விண்ணப்பம் செய்யுமாறு மாற்றுத்திறனாளி வினோத்திற்கு அறிவுரை வழங்கிய ஆட்சியர், அதிகாரிகளிடம் இவருக்கு வங்கி கடன் கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டார்.




மூன்றாவது முறையாக திருமண பேச்சு 


முன்னதாக மாவட்ட ஆட்சியரை இரண்டு முறை சந்தித்துள்ள மாற்றுத்திறனாளி வினோத் தற்போது மூன்றாவது முறையாக ஆட்சியரை நேரில் சந்தித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என்ற கேள்வியை எழுப்புவதும் பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் இவருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுங்கள் என கூறி வந்தார். அதேபோன்று இந்த சந்திப்பிலும் திருமணம் ஆகிவிட்டதா? என மாற்றுத்திறனாளி வினோதிடம் கேட்க, அவரும் இன்னும் இல்லை என தெரிவிக்க ஆட்சியர் மகாபாரதி அங்கிருந்த அதிகாரிகளிடம் இவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் அதிகாரிகள் திருமணமும் செய்து வைக்கவும் வேண்டும் என தெரிவித்தார்.




பல்வேறு இடங்களில் ஆய்வு 


தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். அதனைத் அடுத்து அரசு மாணவியர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். முறையாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறதா? அடிப்படை வசதிகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) முகமது ஷபீர் ஆலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ்,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.