சீர்காழி அருகே செம்மங்குடியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் சேரும் சகதியுமான மண் சாலையில் நடவு நடும் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சாலை கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட்டால் இருந்து வந்துள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
வழியின்றி தவிர்ப்பு
கடந்த 2000 வது ஆண்டு இப்பகுதியில் வசித்த 35 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக வீட்டு மனை வழங்கப்பட்டு தெரு உள்ளே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்வதற்கு இணைப்புச்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தனியார் இடத்தின் வழியே சென்று வந்தனர்.
24 ஆண்டுகால கோரிக்கை
இந்நிலையில் தனியார் இடத்திலும் வீடு கட்டப்பட்டதால் தங்கள் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சாதாரண மழை பெய்தால் கூட சேரும் சகதியுமாக மாறும் சாலையை கடந்து வீடுகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நடவு நட்டு போராட்டம்
இந்த சூழலில் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமான முகப்புச் சாலையில் திடீரென நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலையை அமைக்க வேண்டும் எனவும், தாமதம் ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விரைந்து வந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
இந்த தகவலை அறிந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயேஸ்வரன் உடனடியாக சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று இடத்தினை ஆய்வு செய்து, முதற்கட்டமாக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ஜல்லிகளை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்தார். மேலும் விரைவில் நிரந்தரமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 77 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை தரமானதாக சாலை அமைக்கப்படும் என்றும், மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து அது தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.