மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் சீர்காழி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் நகரமன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6-ஆவது வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கழிவு நீர், மழை நீர் வடிகால் மூலம் புகுந்து குடியிருப்பு பகூதியில் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

நகர்மன்ற கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தல்

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் உட்புகுவதை தடுக்க மன்ற உறுப்பினர் பாலமுருகன் 5-ஆவது வார்டு உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கழிவுநீர் பாதையில் மண்ணை கொட்டி அடைத்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், 5 - ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் மதியழகன் ஆகியோர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நகராட்சி அலுவலகம் முற்றுகை 

இந்நிலையில், 5, 6-ஆவது வார்டு பகுதியில் குடியிருப்புகளை கழிவு நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும், நகரில் அன்றாடம் குப்பைகளைளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சீர்காழி நகராட்சி நகர நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற உறுப் பினர் பாலமுருகன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், கலைச்செல்வி, ரமாமணி, நாகரத்தினம், ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தங்கள் வார்டு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு 

இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சி ஆணையர் மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து சீர்காழி காவல்துறையினர், நகராட்சி ஆணையர் தர்னாவில் ஈடுபட்டவர் களை அழைந்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரண்டு நாட்களில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கை விடப்பட்டு கலைந்து சென்றனர். சீர்காழி நகரின் முக்கிய விதியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள் 

சீர்காழி நகராட்சி நிர்வாகம் சீர்கேடு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதும், தம்மை நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முடியாமல் நகர மன்ற உறுப்பினர்களும் போராடுவதும் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.