சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் காரில் பயணம் செய்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டூ காரைக்கால்
சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் குமாரசாமி என்பவரது மகன் 53 வயதான குமார். இவர் தனது மனைவி 52 வயதான வேதவல்லி, 35 வயதான மருமகன் காளிதாஸ், 33 வயதான மகள் லலிதா, 31 வயதான மகன் திவாகர், பேரக்குழந்தைகள் 9 வயதான விஷ்வா மற்றும் 3 வயதான மாதேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு தனது மகள் மற்றும் பேரன்களை அம்பகரத்தில் உள்ள அவர்களது வீட்டில் விடுவதற்காக வந்துள்ளனர்.
சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
அப்போது விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் செல்லும் போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் காரின் டீசல் டேங்க் உடைந்து, கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
7 பேர் காயம்
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டனர். விபத்தில் காரை ஒட்டி வந்த திவாகருக்கு தீக்காயம் ஏற்பட்டது. லலிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் சிறிய காயங்களுடன் -தப்பினர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் விபத்துகள்
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழி சாலையின் வளைவு பகுதிகளில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து இருப்பதன் காரணமாக இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆகையால், மேலும் இதுபோன்ற விபத்துக்கள் தொடராமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.