மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தக்காளி வாங்குவதில் ஏற்பட்ட சாதாரண தகராறு, உச்சகட்ட கொடூரத்தை அடைந்து ஒரு உயிரை பலி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் காய்கறிக் கடை உரிமையாளரைத் தாக்கி கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்பங்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் அதே பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று மதியம், ( டிசம்பர்-6) மாணாந்திடவாசல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் சந்திரசேகர் என்பவர், குடிபோதையில் ராஜாவின் கடைக்கு வந்துள்ளார்.

வழக்கம்போல காய்கறிகளைப் பார்வையிட்ட அவர், தக்காளியின் விலை குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். "ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் என்று ராஜா கூறியுள்ளார். விலையைக் கேட்ட சந்திரசேகருக்கும், ராஜாவுக்கும் இடையே விலை குறித்து  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், குடிபோதையில் இருந்த சந்திரசேகர் ஆத்திரமடைந்துள்ளார்.

Continues below advertisement

தாக்குதலும், துயரமும்

விலை தகராறு காரணமாக ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற சந்திரசேகர், சற்றும் எதிர்பாராத விதமாக ராஜாவுடன் தகராறு செய்ததுடன், அவரைத் கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் நிலைதடுமாறிய ராஜா கீழே விழுந்துள்ளார். தரையில் விழுந்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வெள்ளத்தில் சுயநினைவை இழந்த ராஜா மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட சந்திரசேகர், தான் செய்த காரியத்தின் விபரீதத்தை உணர்ந்து, அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

சத்தம் கேட்டு காய்கறிக் கடையின் அருகே இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்து கிடந்த ராஜாவை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபமாக பிரித்த உயிர்

மருத்துவமனைக்கு ராஜாவைக் கொண்டு சேர்த்தவுடன், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தனர். ஆனால், ராஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தக்காளி விலை தகராறில் காய்கறி கடைக்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை 

இந்தச் சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி சந்திரசேகரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலின் சம்பவ இடமான திருப்பங்கூர் மெயின் ரோடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களிடமும், காய்கறிக் கடை அருகே இருந்தவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினார். விரைவில் குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை  தெரிவித்துள்ளனர்.

சோகத்தில் குடும்பம்

கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தின் ஆதாரமாக இருந்த ராஜா, ஒரு கிலோ தக்காளி விலையைக் கேட்ட தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் கணவரை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீர் அப்பகுதி மக்களை கலங்கச் செய்துள்ளது.