மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா, அதன் உண்மையான பயனாளிகளான மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயுமானவன் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோலாகலமாகத் தொடங்கிய நலத்திட்ட விழா

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தாயுமானவன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, காலை 10 மணிக்கு மேல் தொடங்கியது. விழாவில் 2025 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 70 இலட்சத்து 40 ஆயிரத்து 524 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்த்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் மற்றும் பன்னீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வழங்கினர். மண்டபத்திற்குள் விழா கோலாகலமாக நடந்துகொண்டிருந்த வேளையில், வெளியே நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

Continues below advertisement

பயனாளிகளின் பரிதவிப்பு

விழா மேடையில் பிரமுகர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில், இந்த நலத்திட்டங்களுக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகள், பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, விழா நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே இறக்கிவிடப்பட்டனர். காலை 10 மணிக்கு விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, அதாவது காலை 9 மணி முதல் விழா நிறைவடைந்த மதியம் 12 மணி வரை, சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் மண்டபத்திற்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் பிற அழைப்பாளர்கள் மண்டபத்தின் உள்ளே அமர்ந்திருக்க, யாருக்காக இந்த விழா நடத்தப்பட்டதோ, அந்த மாற்றுத்திறனாளிகள் வெயிலில் வாடியது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின்னரே அவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தாமதமான உதவியும், வலுக்கும் கண்டனங்களும்

முதலமைச்சரின் காணொளி உரை மற்றும் மண்டபத்திற்குள் நடைபெற்ற பிரதான விழா முழுமையாக நிறைவடைந்த பின்னரே, மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் வெளியே வந்து வெயிலில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உதவி கிடைத்தபோதிலும், அது வழங்கப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இது குறைந்தபட்ச மனிதாபிமானமற்ற செயல் என்று குற்றம் சாட்டியுள்ளனர். "நலத்திட்ட உதவி வழங்குவது பாராட்டத்தக்கது. ஆனால், அதற்காக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளிகளை மணிக்கணக்கில் வெயிலில் காக்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?" என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு ஒரு நிழலான இடத்தை ஒதுக்கி, அங்கு அமர வைத்திருந்தாலே அது மனிதாபிமானம் மிக்க நடவடிக்கையாக இருந்திருக்கும் என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.