தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையில் இருந்து அரசின் சேவைகள் மக்கள் இடத்திற்கே கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 44 அடிப்படை பொதுசேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் 

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,500 -க்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம்  கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

வருவாய் துறை அமைச்சர் பெருமிதம் 

இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடம் இருந்து பெறப்பட்ட 15 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று இச்சாதனை படைத்துள்ளது. திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு, அவற்றையும் தாண்டி மக்களிடம் இறங்கி வந்து சேவையாற்றும் மாண்புடைய அரசு என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலில் தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மிகச்சிறந்த சான்றாகும் என வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை நடைபெற்ற மக்கள் முதல்வர் முகாம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுக்காவிற்கு உட்பட்ட ரூரல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அவதியுற்ற பள்ளி மாணவர்கள் 

வழக்கமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபம், சமுதாய கூடங்கள் நடைபெறும். ஆனால் இன்று நடைபெற்ற முகாம் ஆனது அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 25 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி காரணமாக இடப்பற்றாக்குறையால் அப்பள்ளியில் பயிலும் 25 மாணவர்களும் அதே பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சத்துணவு கூடத்தில் அடைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் 

அங்கன்வாடி மையத்தில் சிறு குழந்தைகள் உணவு உட்கொண்டு கல்வி பயின்று வரும் நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அங்கன்வாடி மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வேறு வழி இன்றி அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறு குழந்தைகள் சத்துணவு சமையல் கூடத்தில் அதிகாரிகள் சமையல் பாத்திரங்கள், உணவு பண்டங்கள் வைக்கும் அறையில் எவ்விதமான பாதுகாப்பும் இன்றி ஆபத்து ஏற்படும் வகையில் அடைத்து வைத்தனர்.

சமுக ஆர்வலர்கள் கண்டன் 

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பள்ளி மாணவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். இது போன்ற பொது நிகழ்ச்சிகளை சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் நடத்தாமல், அல்லது பள்ளிக்கு விடுமுறை அளிக்காமல் நடத்தியது செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.