மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால் மாணவி கர்ப்பமான நிலையில் மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்த்துள்ளனர்.
பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் உடன் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக உருமாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவனும், மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி 6 மாதகால கர்ப்பம்
மேலும் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் பெற்றோர் அவளை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உடன் பயின்ற மாணவர் கைது
இதனை கேட்டு அவருடைய பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவருடன் படித்து வரும் சக மாணவன் தான் காரணம் என தெரியவந்தது.
அரசு பள்ளியில் இருந்து சிறார் சீர்திருத்த பள்ளி
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாக மாணவனை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சேர்த்துள்ளனர்.