மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மழை பொழிவு இன்றியும் காணப்பட்டது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் 


வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனை தொடர்ந்து அதே மெதுவாக நகர்ந்து வரும் நிலையில், நாளை நவம்பர் 30-ம் தேதி மாமல்லபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




மழை எச்சரிக்கை மாவட்டங்கள் 


இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




நகராமல் நின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் 


காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடர்கிறது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறி தரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் மிக மெதுவாகவே நகர்ந்து வந்தது. 10 கிலோமீட்டர் வேகத்தில் தொடங்கி 3 கிலோமீட்டர் வேகம் வரை நகர்ந்து வந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில மணி நேரங்கள் நகராமல் அப்படியே நின்றது.




இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று 28 நவம்பர் 2024 அன்று நள்ளிரவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும், நிலைக் கொண்டுள்ளது.




புயலாக மாறாது 


இது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. 


இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பதிவாகி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.




மாவட்டத்தின் மழையளவு 


இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோயில் 8.80 மில்லி மீட்டர் மழையும், குறைந்த அளவாக மணல்மேடில் 2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை - 6 மில்லி மீட்டர், சீர்காழி -7.60 மில்லி மீட்டர் தரங்கம்பாடியில் மழைப்பொழிவு இல்லை, கொள்ளிடம் - 6 மில்லி மீட்டர், மணல்மேடு 2 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 8.80 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 5.07 மில்லி மீட்டர் (0.5 செமீ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 30.40 மில்லி மீட்டர் ( 3 செமீ ) ஆகும்.