மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி வரும் நூற்றுக்கணக்கான மயில்களால் செய்வதறியாமல் தவித்து வரும் விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, மயில்களிடமிருந்து பயிர்களை காக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசியப்பறவை
நாட்டின் தேசியப்பறவையான மயில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது. இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் உள்ளிட்ட சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது பல்வேறு காரணங்களால் தனது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.
ஊருக்குள் படையெடுக்கும் மயில்கள்
உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன. இதனால் வயல்கள் நிறைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மயில்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர். இதனால் வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரும் ரசிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு இடையூறு
ஆனால் இவைகளால் தற்போது விவசாயிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மயில்களை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. மயில்களை புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த மக்கள் அவ்வப்போது ஒரு சில கோயில்களிலும் அடர்ந்த காடு பகுதிகளிலும் பார்க்க நேரிட்டால் மயில்களை பார்த்த உற்சாகத்தில் துள்ளி குதித்து உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்து வந்த காலம் மாறி தற்போது மயில்களின் பெருக்கம் அதிகரித்து காக்கை குருவிகள் போல கிராமம் தோறும் பல நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றி திரிகின்றன.
மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றி திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மயிலின் கூட்டம் அபரிவிதமாக பெருகி காக்கை குருவிகளைக் காட்டிலும் அதிக அளவு மயில்கள் சுற்றித் திரிகின்றன. முன்பெல்லாம் நரிகளின் அதிகமாக இருந்ததால் மயில்கள் இடும் முட்டையை தின்றுவிடும். ஆனால் தற்போது நரிகள் இருக்கின்றதா? இல்லையா? என்பதை தெரியாத நிலை உள்ளதால் மயில்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
நிலக்கடலை சாகுபடி
தரங்கம்பாடி தாலுக்காவில் சிங்கனோடை, அனந்தமங்கலம், ஆனைகோயில் காழியப்பன்நல்லூர், கண்ணப்பன்மூளை ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். குளங்களில் கிடைக்கும் நீரைக் கொண்டு ஸ்பிரிங்லர் முறைப்படி கடும் சிரமத்துக்கு மத்தியில் ஆண்டுகளுக்கு மூன்று போகமும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த மயில்கள் தற்போது மிகவும் சவாலாக உள்ளது.
அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள் மண்ணுக்கு அடியில் உள்ள நிலக்கடலை பிஞ்சுகளை கொத்தி தின்று அதிக அளவு சேதப்படுத்தி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பட்டாசு வெடித்தாலும் சத்தம் எழுப்பினாலும் மயில்கள் கண்டுகொள்ளாமல் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே மயில்களால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மயில்களிடமிருந்து பயிர்களை காக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும், வனத்துறை சார்பில் மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.