மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலையில்லாத இளைஞர்கள், தமிழக அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொடர்ந்து 5 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அட்டையைப் புதுப்பித்து வரும் இளைஞர்களும், மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுப்பிரிவினருக்கான தகுதிகள்

வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு, பதிவுதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

* பதிவு கால அளவு: 30.09.2025 அன்றைய தேதியில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும் (முறையாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்திருக்க வேண்டும்).

 * கல்வித் தகுதி:

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.

* மேல்நிலை வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றவர்கள்.

* பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றவர்கள்.

 * வயது வரம்பு:

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 45 வயதுக்குள்ளும்,

* இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

* வருமானம்: குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* கல்வி நிலை: எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தகுதிகள்

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

* பதிவு கால அளவு: 30.09.2025 அன்றைய தேதியில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தாலே போதுமானது.

* கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் தகுதியுடையவர் ஆவர்.

* உச்ச வரம்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்ச வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை விவரம் (மாதம் ஒன்றிற்கு):

தகுதி உடைய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுகிறது.

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை - ரூ.200/-
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி - ரூ.300/- 
  • மேல்நிலை வகுப்பு (HSC) தேர்ச்சி ரூ.400/-
  • பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி ரூ.600/-

முந்தைய காலாண்டில் வழங்கப்பட்ட உதவித்தொகை

வேலையில்லாத இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், சென்ற காலாண்டில் மட்டும்:

 

* 41 மாற்றுத்திறனாளிப் பயனாளிகளுக்கு ரூ.1,06,350/- (ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முன்னூற்று ஐம்பது )

* 235 பொதுப்பிரிவுப் பயனாளிகளுக்கு ரூ.3,30,000/- (மூன்று இலட்சத்து முப்பதாயிரம்) வழங்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள்

பின்வரும் தகுதியுடைய நபர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர்:

* ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.

 * பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.

* அரசுப் பணியில் உள்ளவரோ அல்லது தனியார் துறையில் ஒரு முறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவரோ/பெறுபவரோ.

 * கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள்.

 * அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக நேரில் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.htmlஎன்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், சாதிச் சான்றிதழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், கட்டாயம் 04364-299790 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு உரிய அறிவுரைகளைப் பெற்ற பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 28.11.2025-க்குள் நேரில் சமர்ப்பித்துப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.