மயிலாடுதுறை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்குடன் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சிறப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, செம்பனார்கோவில் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 150 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை பதுக்கி வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
வளையல் கடையில் பதுக்கல்
செம்பனார்கோவில் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கருவாழக்கரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆராமுதன் என்ற வளையல் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது, சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த அந்தக் கடையின் உரிமையாளரான கோபாலகிருஷ்ணன் (30), த/பெ. ஆராமுதன், என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நடப்பாண்டில் அபார சாதனை விவரங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற சட்டவிரோதப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க அனைத்து தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை இந்த சிறப்பு வேட்டையில் காவல்துறையினர் அபாரமான சாதனையைப் புரிந்துள்ளனர்.
நடப்பாண்டில் சட்டவிரோதக் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகளுடன் தொடர்புடைய 576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1862 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 13 இருசக்கர வாகனங்களும் மற்றும் 01 நான்கு சக்கர வாகனமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
26 கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம்
சட்டவிரோதமாகக் குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிந்துரையின் பேரில், நடப்பாண்டில் இதுவரை சுமார் 26 கடைகள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான நடவடிக்கைகளால் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோர் அச்சத்தில் உள்ளனர்.
காவல் கண்காணிப்பாளரின் கடும் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்களிடம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காவல் துறை செயல்பட்டு வருகிறது.
புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள்
சட்டவிரோதமாக குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்பந்தமாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக இலவச உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை இலவச உதவி எண் 10581 என்ற எண்ணிற்குத் தெரிவிக்கலாம் அல்லது அலைபேசி எண் 96261-69492 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். குட்கா விற்பனையை வேரறுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.