டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான காவிரி நீர் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் ஆனது மேட்டூர் அணையில் ஜூன் 12 -ம் தேதி திறக்கப்படும். ஆனால் பல சமயங்களில் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், நீர்வரத்து குறைவு காரணமாக ஜுன் 12 -ம் தேதி திறக்கப்படாமல் காலம் தள்ளி திறக்கும் நிலையும் ஏற்படும். இதனால் விவசாயம் பெரிதும் பாதிப்படையும்.
மாவட்ட எல்லைக்கு வந்தடைந்த காவிரி
இந்த சூழலில் இந்தாண்டு ஜுன் 12 -ல் மேட்டூரில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுமா? என நீண்ட எதிர்பார்ப்புகளுடன் விவசாயிகள் காத்திருத்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, காவிரி நீர் படிப்படியாக பயணித்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஜூன் 15 ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் திறந்து விட்டார். தொடர்ந்து அந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் எல்லைக்கு நேற்று காலை வந்தடைந்தது.
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர்
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், படிப்படியாக பல்வேறு கால்வாய்கள் வழியாகப் பயணித்து, நேற்று மதியம் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியை வந்தடைந்தது. இது மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. காவிரி நீர்வரத்து மாவட்டத்திற்குள் நுழைந்ததை அடுத்து, நீர்வள ஆதாரத்துறையினர் விரைந்து செயல்பட்டனர். விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், பல்வேறு பாசன வாய்க்கால்கள் வழியாகப் பாய்ந்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்ந்தவும், பாசனத்திற்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
துலா கட்டத்தை அடைந்த காவிரி
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தது. துலாக்கட்டம் வந்தடைந்த காவிரி நீரை துலா கட்ட பாதுகாப்பு குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தியுடன் பூஜைகள் செய்து கற்பூர தீபாராதனை காட்டி வரவேற்று மகிழ்ந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர், நேற்று மயிலாடுதுறை துலா கட்ட காவிரியை வந்தடைந்தது. காவிரி துலா கட்டம் என்பது மயிலாடுதுறை நகரத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவம் இங்கு பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த துலா கட்டத்தை காவிரி நீர் வந்தடைந்தது, அதனை அப்பகுதி மக்களுக்கு ஒரு ஆன்மீக நிகழ்வாக கொண்டாடினர்.
16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம்
காவிரி நீர் வரத்தை அறிந்த காவிரி துலா கட்ட பாதுகாப்பு குழுவினர் மற்றும் ஆன்மீக அன்பர்கள், காவிரி அன்னையை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். பலர் துலா கட்டத்தில் திரண்டு காவிரி நீரை வரவேற்க ஆவலுடன் காத்திருந்தனர். காவிரி நீர் துலா கட்டத்தை வந்தடைந்ததும், காவிரி துலா கட்ட பாதுகாப்பு குழு சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காவிரி அன்னையை வரவேற்கும் விதமாக, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு காவிரி நீருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகங்கள், காவிரி நீரின் புனிதம் மற்றும் செழிப்பைக் குறிக்கும் விதமாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து, மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
தற்போது மயிலாடுதுறையை வந்தடைந்துள்ள காவிரி நீர், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நீர்வரத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, பாசனத்திற்கான நீர் ஆதாரத்தையும் உறுதி செய்யும். விவசாயிகள் தங்களது குறுவை சாகுபடி பணிகளை நம்பிக்கையுடன் தொடங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்வரத்து, மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீர்வரத்து சீராக இருப்பதால், விவசாயம் செழிக்கும் என்றும், விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.