மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வள்ளுக்குடி மற்றும் சீர்காழி நகரப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு கொடிய விஷ பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைக்கோல் போரில் சிக்கித் தவித்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு மற்றும் நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய அதே நீளமுள்ள கருநாகப் பாம்பு ஆகிய இரண்டு பாம்புகளும் சீர்காழிப் பகுதியைச் சேர்ந்த பாம்புபிடி வீரரான "பாம்பு பாண்டியன்" பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.

வைக்கோல் போரில் சீறிய நல்ல பாம்பு

மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அடுத்த வள்ளுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். அவரது வீட்டில் மாடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே வைக்கோல் போர் அமைத்திருந்தார். இந்நிலையில் வைக்கோல் போரில் எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய நல்ல பாம்பு சிக்கிக் கொண்டது. சுமார் 6 அடி நீளம்கொண்ட அந்த நல்ல பாம்பு வலையில் சிக்கி சீறியுள்ளது. அப்போது அதனை கண்டு வீட்டிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர். 

உடனடியாக இதுகுறித்து சீர்காழிப் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிவீரரான "பாம்பு பாண்டியனுக்கு தகவல் தெரிவித்து அவரை அழைத்துள்ளனர்‌. அதனை அடுத்து சற்றும் தாமதிக்காமல் விரைந்து வந்த பாம்பு பாண்டியன், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, வைக்கோல் போரில் சிக்கியிருந்த நல்லப் பாம்பை காயப்படுத்தாமல், வலையை லாவகமாக நறுக்கி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, வலையில் சிக்கியிருந்த அந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டார். 

நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய கருநாகம்: 

இதேபோன்று, சீர்காழிப் பகுதியிலுள்ள மற்றொரு வீடொன்றில் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீர்காழி ஒருவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக்கோழி ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தாள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள், கோழி கூண்டினை உற்று கவனித்து பார்த்துள்ளார். அப்போது, கோழி கூண்டுக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு பெரிய கருநாகப் பாம்பு புகுந்திருப்பதையும், அது அங்கிருந்த கோழி முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கோழியை கொன்று, முட்டைகளையும் விழுங்கிய கருநாகத்தைப் பார்த்த குடும்பத்தினர் பீதியடைந்தனர். 

உடனடியாக அவர்களும் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். தகவல் கிடைத்ததும், பாம்பு பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோழி கூண்டுக்குள் முட்டைகளை விழுங்கி அசைவற்று கிடந்த கருநாகத்தை லாவகமாக பிடித்தார். முட்டைகளை விழுங்கியதால் பாம்பு சற்று நகர சிரமப்பட்ட நிலையில் மிகுந்த கவனத்துடன், பாம்புக்கு எந்தவித காயமும் ஏற்படாத வகையில் அதை பத்திரமாக மீட்டார். தொடர்ந்து மீட்கப்பட்ட அந்த கருநாகப் பாம்பு மற்றும் நல்ல பாம்பு இரண்டையும் தொலைவில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. பாம்பு பாண்டியனின் துரிதமான மற்றும் திறமையான செயல்பாடுகள் பாராட்டுகளைப் பெற்றது.

பாம்புகளைக் கண்டால் செய்ய வேண்டியவை

கோடைகாலம் மற்றும் மழைக்காலங்களில் பாம்புகள் உணவு தேடியும், இருப்பிடம் தேடியும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். இத்தகைய சூழல்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாம்பு மீட்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

  • அருகில் செல்ல வேண்டாம்: பாம்புகளைக் கண்டால், அவற்றின் அருகில் செல்லவோ, தொந்தரவு செய்யவோ முயற்சிக்க வேண்டாம்.

 

  • பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்: பாம்பு இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரித்து, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விலக்கி வைக்கவும்.

 

  • உடனடியாக நிபுணரை அழைக்கவும்: பாம்பு பிடிவீரர் அல்லது வனத்துறையினர் போன்றோரை உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். நீங்களாகவே பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.

 

  • வீட்டைச் சுற்றிலும் தூய்மை: வீட்டைச் சுற்றிலும் குப்பைகள், புதர்கள், வைக்கோல் போர் போன்றவற்றைச் சேகரிக்காமல் சுத்தமாக வைத்துக் கொள்வது பாம்புகள் வருவதைத் தவிர்க்க உதவும்.

விழிப்புணர்வு முக்கியம்

பாம்புக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாம்பு கடித்தவரை முடிந்தவரை அசைக்காமல் வைத்து, கடித்த இடத்திற்கு மேலாக ஒரு இறுக்கமான துணியால் கட்டுப்போடலாம். ஆனால், முதலுதவி செய்த பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிக அவசியம்.