மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Continues below advertisement

திட்ட செயலாக்கம் குறித்து விரிவான ஆய்வு

கூட்டத்தில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சமூக பாதுகாப்புத் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்களின் செயலாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா விரிவாக ஆய்வு செய்தார்.

குறிப்பாக, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா, பிரதமந்திரி கிராம சாலைகள் திட்டம், மற்றும் பாராளுமன்ற உள்ளூர் வளர்ச்சித் திட்டம் உட்பட பல்வேறு முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 

Continues below advertisement

உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள்

தொலை தொடர்பு, அஞ்சல் துறை, ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் சுகம்யா பாரத் அபியான் போன்ற திட்டங்களின் நிலவரங்கள் குறித்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

தேசத்தின் பெருமை மற்றும் மீனவர் நலன்

கூட்டத்திற்குப் பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி குறித்த விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தேசத்தின் பெருமையைக் காக்க வேண்டிய இடத்தில் நாம் உள்ளோம்" மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்காணிக்கும் விதமாக அனைத்துத் துறையினரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ சமுதாய மக்கள் அதிகம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "மீன்பிடி தொழிலை நம்பி உள்ள மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசானது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்கள் முழுமையாக மக்களிடத்தில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள்

ஒவ்வொரு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மக்கள் பயன்பெற்ற எண்ணிக்கை, திட்டத்திற்கான இலக்கீடு மற்றும் தற்போது வரை எய்தப்பட்டுள்ள இலக்கீடு ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் உள்ள அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இறுதியாக, அனைத்துத் திட்டப் பணிகளையும் தரமாகவும், விரைந்து செயல்படுத்தியும், அவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோகுல், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் சங்கர், சீர்காழி நகர்மன்ற துணை தலைவர் சுப்புராயன் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.