மயிலாடுதுறை: மயிலாடுறை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை மற்றும் அவற்றை முழுவதும் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினரின் தீவிர சிறப்பு வேட்டை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், அனைத்துத் தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகள் மூலம் தீவிர சிறப்பு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தச் சிறப்பு வேட்டையின் போது, மயிலாடுதுறை காவல் சரகத்துக்கு உட்பட்ட திருவிழந்தூர், தீப்பாய்ந்தாள்அம்மன் கோயிலைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் 22 வயதான ஆகாஷ் என்பவர் சட்டவிரோதமாகக் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2.100 கிலோ கஞ்சா பறிமுதல்
இதனைத் தொடர்ந்து உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், ஆகாஷைக் கைது செய்ததுடன், அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டில் கஞ்சா மற்றும் குட்கா தடுப்பு நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் பின்வருமாறு ;
* இதுவரை 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* இந்த வழக்குகளில் தொடர்புடைய 361 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 30.015 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
* குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா விற்பனைக் கடைகளுக்குச் சீல்
மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாகக் குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்டும் இந்தக் கடைகளுக்குச் சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் இதுவரை சுமார் 26 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்மந்தமாகப் புகார் தெரிவிக்க, இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 96261-69492 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதால் எவ்விதமான அச்சமும் இன்றி பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க முன் வந்து போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.