மயிலாடுதுறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வின் போது மாணவர்கள் தங்கும் விடுதி முறையாக பராமரிக்கப்படாமலும், சுகாதாரமற்ற முறையில் உணவு செய்து பரிமாறப்பட்டதாலும் அதிர்ச்சியடைந்த செல்வப் பெருந்தகை விடுதி காப்பாளர், சமையலர், பொறியாளர் உள்ளிட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் (எ.தாயகம் கவி), பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், போர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ் அவர்கள் ஆகியோர் அடங்கிய குழு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூடுதல் ஆட்சியரிடம் கேள்வி
இந்நிலையில் முன்னதாக சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் விடுதியில் இருந்த கழிவறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்தும் ஒருசில கம்பிகள் இல்லாமலும் இருந்தது. அதனை கண்ட குழு தலைவர் செல்வப்பெருந்தகை அதிகாரிகளை அழைத்து சரமாரியாக கேள்வி எழுப்பி கடிந்து கொண்டார். பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில் கட்டிடம் தரமான முறையில் உள்ளதா என்று தரச் சான்று வாங்கினீர்களா? என்று கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை, மாவட்ட கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலமிடம் அதிகாரிகள் பொறுப்பின்றி செயல்படுவது சரியா என்று சொல்லுங்கள்? என கேள்வி எழுப்பினார்.
மரவட்டைகள் உள்ளிட்ட பூச்சி புழுகள் நெளியும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு
தொடர்ந்து சமையல் கூடத்தை பார்வையிட்ட குழுவினர் சமையல் கூடம் திறந்த வெளியில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் மரவட்டைகள் உள்ளிட்ட பூச்சி புழுகள் நெளியும் இடத்தில் உணவுகள் வடிக்கப்பட்டு அங்கேயே வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சமையலறை கூடமும் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது போன்ற சுகாதாரமற்ற உணவுகளை தருவீர்களா? என்றும், நாங்கள் ஆய்வு செய்ய வந்த போதே சமையல் கூடத்தை கூட ஒழுங்காக பராமரிக்காமல் சுகாதாரமற்ற முறையில் இவ்வாறு வைத்துள்ளீர்கள் என்றும், மற்ற நேரங்களில் இது எவ்வாறு இருக்கும் என கேட்டு குழு உறுப்பினர்களான மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்து, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
சஸ்பென்ட் செய்ய பரிந்துரை
அரசியல் அமைப்பு தந்தை அம்பேத்கர் படத்தை கூட ஒழுங்காக வைக்கவில்லை என்று திட்டி தீர்த்த செல்வப்பெருந்தகை விடுதி சமையலர், வார்டன் பொறியாளர் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். இதுபோன்று சஸ்பெண்ட் செய்தால் தான் தமிழகத்தில் பணியை ஒழுங்காக செய்யாமல் அலட்சியமாக செய்யும் அதிகாரிகளுக்கு பாடமாக அமையும் எனக் கூறினார். முதல்வன் பட பானியில் மாணவர் விடுதியிலேயே அடுத்தடுத்து பணியில் ஒழுங்காக செயல்படாத நால்வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நால்வரையும் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.