மயிலாடுதுறையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் இல்லையென்றால் இன்று நான் மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது என மயிலாடுதுறையில் ஆட்சியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சுதந்திர தினவிழா உரையில் வெளியிட்ட அறிவிப்பு 

கடந்த 2024 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் முதல்கட்டமாக 1,000 தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த 1000 மருந்தகங்களை தொடங்கி வைத்துள்ளார். 

Continues below advertisement

பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, ஏராளமானவர்கள் இந்த மருந்தகம் தொடங்க விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்கள் திறக்க பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும், மீதம் அனைத்தும் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறை முதல்வர் மருந்தகம் 

அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் தருமபுரம் சாலை குமரன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். தமிழக முதல்வர் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கும் நிகழ்ச்சி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பொதுமக்கள் பார்த்தனர். 

மாவட்ட ஆட்சியர் பேச்சு 

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சென்ற ஆண்டு உடல் நல குறைவு ஏற்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது இதயத்தில் மூன்று அடைப்புகள் உள்ளது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விபரம் கேட்டறிந்து, உடனடியாக சென்னைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அடைப்புகள் சரி செய்யப்பட்டது. 

இதயத்தில் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இதுவரை எந்த அதிகாரிகளும் மூன்று நாளில் பணிக்கு செல்லாத நிலையில் நான் மூன்று நாளில் பணிக்கு சென்றேன். தமிழக முதலமைச்சர் இல்லாவிட்டால் நான் மீண்டும் மாவட்ட ஆட்சியராக உங்கள் முன் இன்று இங்கு பேசிக் கொண்டிருக்க முடியாது. தமிழக முதலமைச்சர் செய்த உதவி என் வாழ்நாளில் மறக்க முடியாத உதவியாக உள்ளதால் என்றும் அவருக்கு நன்றி கடன் பெற்றுள்ளதாக உருக்கமுடன் தெரிவித்தார்.