மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணிபுரிந்து வரும் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்கள் பணிச்சோர்வின்றி பணியாற்றுவதற்காக அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர்கள் அவர்களின் தேவையை கேட்டறிந்து, அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டப்பட்டு, அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து வருகின்ற ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குசாவடிகள் விபரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன.
சட்டம் ஒழுங்கு பணி
சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, கேரளா மாநில சிறப்பு காவல் பிரிவு, ஒரியா மாநில சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் பணியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்ட, ஒரியா மற்றும் கேரளா மாநில சிறப்பு காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் தடபுடலாக கறி சமைத்து விருந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் குஜராத் மாநில தேர்தல் பணிக்கு வழியனுப்பி வைத்தனர்.
காவலர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவான எந்திரங்கள் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து இரவு பகலாக பாதுகாப்பு பணிபுரிந்து வரும் மத்திய தொழிற் பாதுகாப்புபடை வீரர்கள் பணிச்சோர்வின்றி பணியாற்றுவதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் A.P. மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.மீனா இருவரும் அவரைகளை நேரில் சந்தித்து உரையாடினர். மேலும் அவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்தும், பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினர். இந்த நிகழ்வு உறவுகளை பிரிந்து மாநிலங்கள் கடந்து இனம், மொழி வேறுபாட்டிற்கு இடையே தங்களின் பணி சோர்வை போக்கி உற்சாகமடைய செய்ததாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.