தருமபுரம் ஆதீனத்தின் போலி வீடியோ தொடர்பான வழக்கில் கைதாகி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் அகோரம் மோடி பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.


பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம் 


குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறையும், இந்திய நாட்டின் பிரதமராக 3 வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் 74 வது பிறந்தநாள் நேற்று நாடுமுழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.




மயிலாடுதுறை பாஜக


அதேபோன்று தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் பிரதமர் மோடியின் பிறந்தநாள் தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகள் மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 




சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அகோரம் 


இதில் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் க.அகோரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். தொடர்ந்து, சர்க்கரை நோய் கண்டறியும் இலவச ரத்த பரிசோதனை முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 




ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளான தலைவர் 


இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் போலி ஆபாச வீடியோ தொடர்பாக ஆதீன கர்த்தரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெள்ளிவந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தை மாநில தலைமையில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி பதவியில் இருந்து நீக்கினார். இந்த சூழலில் அவரது தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக கட்சி நிர்வாகிகள் அணிவகுத்தது பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 




தருமபுரம் ஆதீன போலி வீடியோ 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான தருமபுரம் ஆதீனம் திருமடம். இந்த ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆதீன கர்த்தரின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக கூறி பணம்கேட்டு மிரட்டியதாக ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 -ம் தேதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 




பாஜக மாவட்ட தலைவர் கைது


புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேர் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில். கடந்த மார்ச் மாதம் 16 -ம் தேதி கைது செய்யப்பட்ட பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலமுறை ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில் கடந்த 7 -ம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் அடுத்து திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சித்தர்க்காடு பகுதியில் பட்டாசு வெடித்து ஆள் உயர மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 




செய்தியாளர்களிடம் பேசிய அகோரம் 


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கூறுகையில், தருமபுரம் ஆதீனத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நான் மிரட்டியதாக பொய்வழக்கு பதிவு செய்தனர். தருமபுரம் ஆதீனத்தின் மீது மிகப்பெரிய பற்றுவைத்துள்ளேன். பட்டினப்பிரவேசம் நடத்தக்கூடாது என்று திமுக அரசு தடைவிதித்தபோது, 24 மணிநேரம் இரவு பகல் பாராமல் உழைத்து பட்டினப்பிரவேசத்தை நடத்திகாட்டினேன். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செப்பேடுகள், உலோக சிலைகள் கண்டெடுத்தபோது நிர்வாகத்திற்கும், தருமை ஆதீனத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தேன். பாஜகவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டோம். நான் தேர்தலில் நிற்ககூடாது என்று என்மீது வீன்பழி சுமத்தப்பட்டது. நான் தவறு செய்திருந்தால் அதற்கான ஆவனங்களை வெளியிட வேண்டும். பாஜகவிற்கும், ஆதீனத்திற்கும் துரோகம் செய்யவில்லை. சில துரோகிகள் திட்டமிட்டு அவதூராக பழிசுமத்தியிருக்கிறார்கள்.




என்மீது போடப்பட்ட பொய்வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, தமிழக கவர்னரை சந்திக்க உள்ளேன். என்மீது தவறான குற்றம் சுமத்தியவர்களை சட்டரீதியாக தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். இந்த சமுதாயத்திற்கும், தருமபுர ஆதீனத்திற்கு துரோகம் செய்யாமல், ஒரு தவறு செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன் என்றார். இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாத முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம் மீண்டும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.