சீர்காழியில் தொடர் மின் மோட்டார்களை திருட்டி வந்த ஈடுபட்ட மூவரை  கைது செய்து அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில், தப்பி செல்ல முயன்ற திருடர்கள் தவறி விழுந்து கை எலும்பு முறிந்ததில் அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


2 ஆண்டுகளுக்கு மேலாக களவாட பட்டு வந்த மின் மோட்டார்கள்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள், வயர்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட தடவாள பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக களவாட பட்டு வந்தன.  இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து மின்சாரத்துறையினருடன் இணைந்து சீர்காழி மற்றும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் தொடர்ந்து திருட்டு நடைபெறுவதும் அதுகுறித்து புகார் அளிப்பதும் அப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்கதையாக மறியது.




தனிப்படை அமைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர் மின் மோட்டார்கள் களவு போவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் காயத்ரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மூர்த்தி, தனிப்படை காவலர்கள் விஷ்ணு, விஜயகுமார் ஆகியோர் சீர்காழி புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  




சீர்காழி தாலுக்காவை சேர்ந்த திருடர்கள்


அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் சிறிய மின் மோட்டார் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் மூவரையும் சீர்காழி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சீர்காழி கோயில் பத்து  பகுதியை சேர்ந்த 23 வயதான சூரியபிரகாஷ், சீர்காழி வசந்தம் நகரை சேர்ந்த 33 வயதான காந்தி ராஜன், சீர்காழி தாடாளன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்கிற தமிழரசன் ஆகியோர் என்பது தெரியவந்தது.




10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்


இந்த மூவரும் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் தொடர் மின்மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. அதனை அடுத்து அவர்களிடமிருந்து மேலும் 10 மின் மோட்டார்கள், ஒரு மடிக்கணினி, மோட்டார் வயர்கள், குளிர்சாதன பெட்டியின் அவுட்டர் யூனிட், இரும்பு சங்கிலி உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். 




இருவருக்கு மாவுக்கட்டு


இந்நிலையில், தொடர் மின்மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் திருடிய மின்மோட்டார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சூரிய பிரகாஷ், காந்தி ராஜன், செல்லப்பா ஆகிய மூவரையும் காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் பிடியிலிருந்து சூர்யா மற்றும் செல்லப்பா ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்று  தப்பி ஓடியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் இடது கையில்  எலும்பு முறிவு ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டு பின்னர் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  மூவரையும் சிறையில் அடைத்தனர்.