மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் டிக்கெட் பரிசோதகர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி செல்போனில் படம் எடுத்து அனைத்து பயணிகள் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில் யோவ் அடையாள அட்டையை தரமுடியாது போயா என்று ஒருமையில் திட்டியதாக ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி மாணவன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பனியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி குமார் என்பவரது மகன் 20 வயதான ஆகாஷ். ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி. மாணவன் ஆகாஷ் மணல்மேடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு தனது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க மணல்மேட்டில் இருந்து 1.சி எண் கொண்ட அரசு நகரப் பேருந்தில் மயிலாடுதுறைக்கு பயணம் செய்துள்ளார். 




அவர் பயணம் செய்த பேருந்தில் அதிக அளவில் பொதுமக்கள் பயணம் செய்ததால் மாணவன் ஆகாஷ் மாற்றுத் திறனாளி அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து அதற்கான டிக்கெட்டை வாங்க முடியவில்லை. இந்த சூழலில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பேருந்து வந்துள்ளது அப்போது பேருந்தில் இருந்து இறங்கும் போது டிக்கெட் பரிசோதகர் மோகன் மற்றும் டைம் கீப்பர் ஆகிய இருவரும் மாற்றுத் திறனாளி மாணவன் ஆகாஷிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் நடத்துநர் தன்னருகே வராததால் ஒரு கை இல்லாத தன்னால் கூட்டத்தில் உள்ளே நுழைந்து டிக்கெட்டை வாங்க முடியவில்லை என்று கூறி தனது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டியுள்ளார். அப்போது மாற்று திறனாளி அடையாள அட்டையை வாங்கி கொண்ட டிக்கெட் பரிசோதகர் மோகன், கல்லூரி மாணவன் ஆகாஷ்சிடம் அடையாள அட்டையை கொடுக்காமல் பயணிகள் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில் யோவ், தரமுடியாது போயா என்று ஒருமையில் திட்டியதாக ஆகாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.




நீ டிக்கெட் வாங்கி கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும், மாற்றுதிறனாளி அட்டையை வைத்து கொண்டு டிக்கெட் எடுக்கவில்லை என எங்கள் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி உன்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி அடையாள அட்டையை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு இந்த அடையாள அட்டையை நீ பயன்படுத்த முடியாத அளவில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியதாக மாணவர் தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் கூறி தனது அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு வந்ததாகவும், சகமாணவர்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில் டிக்கெட் பரிசோதகர் தன்னை ஒருமையில் திட்டியதால் மன உளைச்சல் அடைந்ததாக தொவித்த ஆகாஷ், டிக்கெட் பரிசோதகர் மற்றும் டைம் லைன் ஆபீசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 




இதுகுறித்து பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதனை செய்யும் அலுவகத்தில் கேட்ட போது இவர்கள் மாற்றுதிறனாளிகள் அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்றிருக்க வேண்டும், இதன் மூலம் இவர்கள் பயணம் செய்யும் தொகையை நாங்கள் அரசிடம் பெற்றுகொள்வோம், அதற்காக தான் நாங்கள் வேலை செய்கிறோம் என்று அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்கள் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை பிடிங்கி வைத்துகொண்டு டிக்கெட் பரிசோதகர் ஒருமையில் பேசி திட்டும் வீடியோவை சக நண்பர்கள்  வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.