தை முதல் தேதி அன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகள் ஆண்டு தோறும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடுகளுக்கு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2-ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலை, நெற்கதிர் மாலை ஆகியவற்றை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்கள் பண்பாடு.




நெட்டி மாலைகள்:


இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே. அந்த நெட்டி மாலைகள் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த மூங்கில் தோட்டம் கிராமத்தில், மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, ஆடு, மாடுகள் அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி மாலை செய்யும் தொழிலை சுமார் 200 குடும்பங்கள் மேல் குடிசைத் தொழிலாக செய்து வந்த நிலையில், தற்போது நெட்டி செடிகள் மயிலாடுதுறை பகுதியில் முற்றிலும் அழிந்ததனாலும், பிளாஸ்டிக் மாலைகளின் வரவாலும் இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.




நெட்டி செடிகள்:


தற்போதைய நிலையில் இப்பகுதியில் 5 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர். இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், தங்கள் குடும்பத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வருவதாகவும், குடும்பத்தினர் அண்டை மாநிலமான பாண்டிச்சேரிக்கு சென்று கண்மாய் ஓரங்களில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு விளையக்கூடிய நெட்டி செடிகளை பறித்துவந்து, அதை நன்கு உலர வைத்து பின்பு பலவித வடிவங்களில் வடிவமைத்து அதற்கான வர்ண சாயத்தில் நனைத்து சூரிய ஒளியில் காய வைக்கிறனர்.




பின்னர் இந்த நெட்டி மாலைகளை கட்டுவதற்காக இயற்கை குணம் கொண்ட தாழம்பூ மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இழை நார்களை கொண்டு நெட்டி மாலைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறுகையில் இதற்கான வர்ண சாயங்கள் கும்பகோணத்திலிருந்து வாங்கப்படுவதாகவும், இதற்கு ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு மூன்று மாதம் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் போதிய விற்பனை நடைபெறுமா? என கவலை தெரிவிக்கும் இவர்கள், இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் நெகிழி மாலைகள்தான் என்கின்றனர்.




நெகிழி மாலைகளால் ஆபத்து:


கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் மாலைகள்தான் அதிகம் விற்பனையாவதால் வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது என்றும், பொதுமக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களையும் வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் கால்நடைகள் நெகிழி மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதேவேளை பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது.




இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை. எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்று மாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும் என்றும், இந்த நெகிழி மாலை விற்பனையை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர். உழவனின் தெய்வமான மாடுகளை மாட்டுப்பொங்கள் அன்று இதுபோன்ற நெட்டி மாலைகள் உருவாக்கி அவைகளை அலங்கரித்து பார்ப்பதே தமிழர் பண்டிகைக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.