தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான குழுக்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
மணிமேகலை விருது
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த சமுதாய அமைப்புகளை மணிமேகலை விருதிற்கு தேர்வு செய்திட 17.04.2025 முதல் 02.05.2025 வரை 16 நாட்கள் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.
5 லட்சம் ரூபாய் பரிசு
எனவே தகுதியான சமுதாய அமைப்புகளின் விண்ணப்பித்தினை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் அளித்திட வேண்டும் எனவும், அதன்படி தகுதியான சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பரிந்துரைக்கப்படவுள்ளது. மேலும் மணிமேகலை விருதிற்கு பரிந்துரைக்கப்படும் சமுதாய அமைப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு 5 லட்சம் ரூபாய், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு 3 லட்சம் ரூபாய், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமும், நகர்ப்புற பகுதிகளுக்கு பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 3 லட்சம் ரூபாய், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், மாவட்ட அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு 50 ஆயிரம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், நகரப் பகுதிகளை சேர்ந்த பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 1 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும் மணிமேகலை விருதிற்கு வழங்கப்படவுள்ளது.
விருதின் நோக்கம்
இந்த விருது, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு சமூக மாற்றத்தை உருவாக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதி சமுதாய அமைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதியுடைய அமைப்புகள்
- ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்கள்
- நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள்
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்
- வட்டார அளவிலான கூட்டமைப்புகள்
- கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்
- நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள்
விருதிற்கான பரிசுத் தொகை அமைப்புகளின் வகையின்படி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
மாநில அளவில்:
- வட்டார அளவிலான கூட்டமைப்புகள் – 5,00,000 ரூபாய்
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் – 3,00,000 ரூபாய்
- கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் – 1,00,000 ரூபாய்
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 1,00,000 ரூபாய்
- நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள் – 3,00,000 ரூபாய்
- நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 1,00,000 ரூபாய்
மாவட்ட அளவில்:
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் – 1,00,000 ரூபாய்
- கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் – 50,000 ரூபாய்
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 25,000 ரூபாய்
- நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள் – 1,00,000 ரூபாய்
- நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 25,000 ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய அமைப்புகள் தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.