மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறையில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த மகேந்திரன் என்பவர், தனக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரி அவரது உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

கூடுதல் பொறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்

குத்தாலம் தாலுகா, பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தத்தங்குடியில் செயல்பட்டு வரும் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது ஆசிரியர் பணிக்குக் கூடுதலாக, மணல்மேடு, சீர்காழி, ஆக்கூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளின் காப்பாளர் பொறுப்பும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மூன்று விடுதிகளின் காப்பாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பணியை ஒரே நேரத்தில் கவனிப்பது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

Continues below advertisement

குடும்பப் பொறுப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள்

மகேந்திரனுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், அவர் வயதான தனது தாய் தந்தையரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், தனக்கு நெஞ்சு வலி மற்றும் முதுகு தண்டுவடப் பிரச்சனைகள் உள்ளதாகவும், அதற்காகத் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், மூன்று விடுதிகளைப் பார்க்க இயலாது என்றும், காப்பாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

விடுதி உணவுப் பணம் பிரச்சனை

கூடுதல் பணிச்சுமையைத் தாண்டி, விடுதி நிர்வாகத்திலும் அவருக்குப் பிரச்சனைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்று விடுதிகளுக்கும் கடந்த ஐந்து மாதங்களாக மாணவர்களின் உணவுக்கான அரசாங்க ஒதுக்கீட்டுப் பணம் வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், விடுதி உணவுப் பிரச்சனையைச் சமாளிக்க மகேந்திரன் தனது சொந்த சம்பளப் பணத்தைச் செலவிட்டுள்ளார். இந்தப் பணத் தட்டுப்பாடு தொடர்பாக அவர் தனது வீட்டிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஆசிரியர் பணியின் அழுத்தம், கூடுதல் காப்பாளர் பொறுப்பின் சுமை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சம்பளப் பணத்தைச் செலவிட்டது தொடர்பான மன உளைச்சல் ஆகியவற்றின் காரணமாக மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகேந்திரனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

"கூடுதல் பணிச்சுமை மற்றும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் மன அழுத்தத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மகேந்திரனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். உரிய நீதி கிடைக்கும் வரை மகேந்திரனின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் மகேந்திரனின் தற்கொலை, அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு அதிகப்படியான கூடுதல் பொறுப்புகளை ஒதுக்குவதால் ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான தாக்கங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, மகேந்திரனின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.