மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ மற்றும் தொழிலாளர் நல வாரியம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் "நிறைந்தது மனம்" திட்டத்தின் கீழ், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம், ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினைப் பயனாளியிடம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வழங்கி, இத்திட்டங்களின் பயன்கள் குறித்துக் கலந்துரையாடினார்.

Continues below advertisement

பெண்களின் முன்னேற்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள்

தமிழ்நாடில், சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகப் பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தமிழக அரசால் பிரத்யேகமாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

Continues below advertisement

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்

* அன்னை தெரசா அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்

* டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவி திட்டம்

* பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ)

* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்

* ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்

* சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

* முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்

கடந்த கால நலத்திட்ட உதவிகள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், பெண்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய நலத்திட்ட உதவிகளின் சுருக்கம்:

  • 2022-2023 ஆண்டு 50 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.5,992 வீதம் 2,99,600 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
  • 2023-2024 ஆண்டு 13 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.5,824 வீதம் 75,712 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
  • 2023-2024 ஆண்டு நவீன தையல் இயந்திரங்கள் 20 விதவைப் பெண்கள் ரூ.8,436 வீதம் 1,68,720 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
  • 2024-2025 ஆண்டு 30 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ரூ.5,539 வீதம் 1,66,170 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

திருமண நிதியுதவி (ஈ.வெ.ரா.மணியம்மையார் திட்டம்) 

  • 2022-2023 நிதியுதவி மற்றும் 184 கிராம் தங்க நாணயம் 23 பெண்கள் 11,50,000 செலவில் வழங்கப்பட்டுள்ளது.
  • 2023-2024 நிதியுதவி மற்றும் 3.592 கிலோ கிராம் தங்க நாணயம் 449 பெண்கள் 1,92,00,000 (நிதியுதவி) 
  • 2024-2025 நிதியுதவி மற்றும் 464 கிராம் தங்க நாணயம் 58 பெண்கள் 25,50,000 (நிதியுதவி) 

சீர்காழியைச் சேர்ந்த ரீட்டாமேரிக்கு ஆட்டோ 

அந்த வகையில், இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரீட்டாமேரி (வயது 40) என்ற கைம்பெண் பயனாளிக்கு, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத் திட்டம், தாட்கோ துறை சார்பில் தொழில் முனைவோர் திட்டம், மற்றும் தொழிலாளர் நல வாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களின் கீழ் ஒருங்கிணைந்த உதவியாக, ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

"இனி என் செலவுகளை நானே கவனித்துக் கொள்வேன்" - பயனாளி நெகிழ்ச்சி

ஆட்டோவைப் பெற்ற ரீட்டாமேரி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவர் பேசுகையில், "என் கணவர் எதிர்பாராத விபத்தில் இறந்து விட்ட பிறகு, எனது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத் துறையின் திட்டங்கள் குறித்து உறவினர்கள் மூலம் அறிந்து, அங்குள்ள அலுவலர்களைச் சந்தித்தேன். எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும் என்றும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தேன். அவர்களின் அறிவுரைப்படி, மூன்று துறைகளின் திட்டங்களை இணைத்து விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் ரூ.3.54 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. இந்த ஆட்டோ ஓட்டும் தொழிலின் மூலம் இனி எனது பொருளாதாரத் தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்வேன். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பெண்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் இந்த "நிறைந்தது மனம்" திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழும் ஏராளமான ஆதரவற்ற பெண்களுக்குப் புதிய நம்பிக்கையையும், நிலையான வாழ்வாதாரத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.