தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் வாரணாசியில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.


பழமையான தருமபுரம் ஆதீனத்திருமடம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழைமையான தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக அவருடைய சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 




9 பேரும் மீது வழக்குபதிவு 


அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுரம் ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.




ஜாமீனில் விடுதலை 


புகாரை அடுத்து ஆதீனத்தில் நேர்முக உதவியாளர் செந்தில் ஆதீனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.




ஜாமீன் மறுப்பு 


இந்நிலையில் நேற்று தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று அரசு தரப்பில் வாதிட்டதை ஏற்று நீதிபதி செந்திலின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.




தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் கைது


இந்த சூழலில் 4 மாத காலமாக செந்திலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற தனிப்படை போலீசார் தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்துள்ளனர். முன்னதாக ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய இருவர் எந்த தவறும் செய்யவில்லை தவறுதலாக குறிப்பிட்டதாக புகார் அளித்த ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனித்தனியாக அனுப்பிய கடிதம் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரை மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கடிதம் வழங்கியதாக விருத்தகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.