மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் முகத்தூவாரத்தில் இருந்து விவசாயிகள் மத்திய, மாநில அரசு நீதி கேட்கும் பேரணியை  தொடங்கியுள்ளனர்.


பூம்புகாரில் தொடங்கிய விவசாயிகள்  பேரணி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கடற்கரையில் இருந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க சார்பில், சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ராசிமணல் அணை கட்டுமானப்பணியை துவங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பேரணியை தொடங்கியுள்ளனர். இந்த பேரணியானது பல்வேறு மாவட்டங்களில் வழியாக சென்று ஜூன் 12 -ம் தேதி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பேரணியை தொடங்கியவைத்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,




பறிபோகும் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் 


தமிழ்நாட்டில் நீராதார உரிமைகள் பறிபோகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு , அமராவதி சிறுவாணி,காவிரி, பாலாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் உரிமைகள் சட்டப்படி பெற்ற உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசுதயங்கி நிற்கிறது. உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முழுமையிலும் உள்ள விவசாயிகள் அமைப்புகளை ஒன்றிணைத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டல நீர் ஆதார உரிமைகள் மீட்பு குழுவை ஏற்படுத்தியிருக்கிறோம். முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் .
பாலாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு விரைவில் உருவாக்க உள்ளோம். 




தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும்.


காவிரியில்  மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி கருத்து கோரும் தீர்மானத்தை காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு அரசு ஆதரவோடு நிறைவேற்றி இருக்கிறது. இதனை நிராகரிக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற போராடி வருகிறோம். இந்நிலையில் ஜூன் 12 காவிரியில் மேட்டூர் அணையை திறப்பது டெல்டா விவசாயிகளின் உரிமையாகும். கர்நாடகம் நமக்கு 98 டி எம் சி தண்ணீர் கடந்த ஆண்டு நிலுவையில் வைத்துள்ளது. நிலுவைத் தண்ணீரை உடனடியாக பெற்று மேட்டூர் அணையை திறக்கவேண்டும். மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இழந்து விடும்.


கேரளவில் முற்றுகை 


மேகதாது அணை கட்டுமானப்பனியை தடுத்து நிறுத்தி ராசி மணல் அணை கட்டுமானத்தை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பூம்புகார் காவிரி வங்கக்கடலில் கலக்கும் சங்கத்தில் இருந்து நீதிகேட்டும் பேரணியை துவங்கியுள்ளோம். இந்த பேரணி காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒக்கேனக்கல் வழியாக மேட்டூரில் ஜூன் 12 தேதி சென்றடையும் அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற்றது நிறைவு பெறுகிறது. ஜூன் 13 கொங்கு மண்டல நீர் ஆதார உரிமைகள் மீட்பு குழுவின் சார்பில் சின்னாறு பகுதியிப் கேரள அரசை முற்றுகையிட செல்ல உள்ளோம் என்றார். 




மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை விரைந்து முடித்து தண்ணீரை தேக்கி தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தற்பொழுது பருத்தி, நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் சீர்காழி கணேஷ், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர்கள் கடலூர் ராமச்சந்திரன், சீர்காழி சுரேஷ், கோபி இளங்கோவன், கௌரவத் தலைவர் கோவி. நடராஜன் முருகேசன் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை தெற்கு மாவட்ட செயலாளர் பண்டரிநாதன் தலைவர் முருகேசன் செய்திருந்தனர்.