காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை:
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக கன மழை பெய்தது. நேற்று இன்று மழை ஓய்ந்த நிலையில், குடியிருப்புகள், வயல் வெளிகள் என பல்வேறு இடங்களில் தண்ணீர் தோங்கி நிற்கிறது.நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட சூழலில் தற்போது காலை முதல் வெயில் அடித்து வருகிறது. மேலும் மழை நீர் வடிவதால் ஆறு, வாய்க்கால்களின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர்
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 35 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி மாலை 8.00 மணியளவில் 117.57 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் (Down Stream) உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீரும் காவிரி ஆற்றில் சுமார் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
அதிகளவில் முதலைகள்
எனவே, காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கனஅடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், மழை நீருடன் அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் கலக்கிறது.
இதையும் கிளிக் பண்ணுங்க பாஸ் : 2025 உங்கள் எப்படி இருக்கப் போகுது? இதோ புத்தாண்டு ராசிபலன்..!
ஆற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்
மேலும் உபரிநீர் திறப்பு அதிகரிக்க கூடும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக் கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக் கொண்டுள்ளனர்.