மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து 233 பயனாளிகளுக்கு 6 கோடியே 74 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி கடன் உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் உத்தரவின் படி, மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, மாவட்ட முன்னோடி வங்கியாக திகழும் "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி" மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது.




கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் மயிலாடுதுறை


தமிழக அளவில் பல்வேறு கடன் உதவி வழங்குவதில், நமது மயிலாடுதுறை மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் அனைத்து கடனுதவி வழங்குவதிலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டிய வளர்ச்சி பெற்று நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது. UYEGP எனப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் கடனுதவி வழங்கும் திட்டத்தில், நாளது தேதியில் இலக்கை தாண்டிய கடனுதவிகள் வழங்கி தமிழகத்தில் முதன்மையான மாவட்டமாக நமது மயிலாடுதுறை மாவட்டம் திகழ்கிறது.  AABCS (அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்), NEEDS ஆகிய இரண்டு திட்டங்களிலும் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடனுதவி வழங்கி மாநிலத்தில் மூன்றாவது மாவட்டமாக திகழ்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள வங்கிகள் கொடுத்த கடனுதவிகளால், நமது மாவட்ட தொழில் மையமானது, தமிழகத்தில் “சிறந்த தொழில்மையம்" என்னும் விருதையும் பெற்று சிறந்து விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி வழங்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு, இலக்கினை எட்டியுள்ளோம்.




2500 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்க இலக்கு 


நமது மாவட்டத்தில் 2500 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்க தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில், நடைபெறும் முகாமில் மட்டும் சுமார் 233 மாணவ,  மாணவியர்களுக்கு ஆறு கோடியே எழுபத்தி நான்கு லட்சத்து அறுபத்து நான்கு ஆயிரம் ரூபாய் கடனுதவி, நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கியான ஐஓபி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வழங்கப்படுகிறது.  இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalaksmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று. விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் வழங்கப்படும். 




கல்விக்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்:


தேவைப்படும் ஆவணங்கள்: www.vidyalaksmi.co.in இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர்மணிமேகலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி,பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராமநாதன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அருண் விக்னேஷ் உடன் இருந்தனர்.