திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க சென்று வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடலுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அஞ்சலி செலுத்தி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த ஜனவரி 21 -ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் நோக்கம் என்பது மாநில உரிமைகளை மீட்டெடுப்பது என்று அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், இளைஞர் அணி மாநாட்டில் திமுக ஆட்சியின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம், தலைவர்களின் பிரம்மாண்ட உருவங்கள், நீட் எதிர்ப்பை உணர்த்தும் வகையிலான கண்ணாடி அரங்கு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்ட இருந்தது. அதுமட்டுமின்றி அதிமுக மாநாட்டில் பெரும் பேசு பொருளாக இருந்த உணவிற்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து, மாநாட்டில் கலந்து கொண்டு அனைவரும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநாட்டின் போது ஒரு சோக நிகழ்வு ஒன்று நடந்தேறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் , மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியம் ரூரல் ஊராட்சி டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகன் 40 வயதான தங்கபிரகாசம். தீவிர திமுக தொண்டரான இவர் சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ளார். அப்போது மாநாட்டு பந்தலின் முன்பு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தங்கப்பிரகாசம் மயக்கமடைந்துள்ளார். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்ட ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு தங்கப்பிரகாசம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திமுகவையும், திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அங்கு அவருக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த தங்கபிரகாசத்தின் உடலுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தங்கப்பிரகாசம் வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 4 லட்சம் ரூபாய் பணமும் மற்றும் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் 3 லட்சம் ரூபாயும் என மொத்தம் 7 லட்சம் ரூபாயை தங்களது சொந்த நிதியை வழங்கினர். உயிரிழந்த தங்கப்பிரகாசத்துக்கு பரிமளா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் - மயிலாடுதுறையில் சோகம்