மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாதம் ஒருமுறை மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெற்று, அவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கூறுகையில்; 


முதலமைச்சரின் உத்தரவு 


தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை உறுதிசெய்யும் நோக்குடன் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெற்று, அவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக உயர்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான தங்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான ஆலோசனை பெறவும், சரியான வழிகாட்டுதல் பெறவும் இந்தக் கட்டுப்பாட்டு அறை ஒரு முக்கியப் பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள்


மாவட்ட ஆட்சியரகத்தின் நான்காவது தளத்தில், அறை எண் 409-ல் இந்தக் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை 04364-220522 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு, தேவையான தகவல்களையும் வழங்குவார்கள்.


இந்தக் கட்டுப்பாட்டு அறையின் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி சேர்க்கை நடைமுறைகள், பல்வேறு படிப்புகள் குறித்த தகவல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசு உதவித் திட்டங்கள், கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், விடுதி வசதிகள் மற்றும் பிற கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.


தொடர் கண்காணிப்பு மற்றும் ஆதரவு


மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 -ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும், கலை, அறிவியல், பொறியியல், சட்டம், வேளாண்மை, பாராமெடிக்கல் போன்ற உயர்கல்வித் துறைகளில் சேர்க்கை பெறும் வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கும் ஆவணத் தட்டுப்பாடு, நிதி சார்ந்த பிரச்சனைகள், மனத்தடைகள், மற்றும் விழிப்புணர்வு பற்றாக்குறை போன்ற காரணங்களுக்குத் தேவையான துறைகளுடன் இணைந்து தீர்வு காணப்படும். மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறினால், அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட கட்டுப்பாட்டு அறை சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


தினசரி கண்காணிப்பு 


தினசரி மாணவர்களின் விண்ணப்ப மற்றும் சேர்க்கை நிலைகள் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் EMIS (Educational Management Information System) மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், மாதத்திற்கு ஒருமுறை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர் குறைதீர்க்கும் நாள் (Student Grievance Day) நடைபெறவுள்ளது. இந்த நாட்களில், மாணவர்கள் நேரடியாக உயர்கல்வியில் சேர்வதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பெற்றோர்களும், மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டார்.