மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மாவட்ட குழந்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அரசு தத்துவள மையத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், சமூக ஆர்வலர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை ரயில் நிலையத்தில் கைவிட்டுச் சென்றவர்கள் குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த குழந்தை

கடந்த மே 26 ஆம் தேதி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில், பிறந்து சுமார் 15 நாட்களே ஆன ஓர் ஆண் குழந்தை ஆதரவற்ற நிலையில் அழுதபடி கிடந்துள்ளது. பயணிகளின் கவனத்தை ஈர்த்த அந்தக் குழந்தையின் அழுகுரல், பலரையும் அசைத்துப் பார்த்தது. இதனைக் கண்ட ரயில் பயணிகள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தகவல் கிடைத்ததும், ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ வடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டார். பின்னர் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பராமரித்து வந்தனர். குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

அரசு தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கும் மேலாகியும், குழந்தைக்கு யாரும் உரிமை கோர முன்வரவில்லை. இதனால் குழந்தையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் அறிவுறுத்தலின்படி, குழந்தையை அரசு தத்துவள மையத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட சமூக நல பணியிடங்கள் ஆரோக்கியராஜ், குழந்தை சேவை அமைப்பு ஆற்றுப்படுத்துநர் தீபிகா மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து குழந்தையை பத்திரமாக அரசு தத்துவள மையத்தில் ஒப்படைத்தனர். குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், பராமரிப்பையும் தற்போது தத்துவள மையம் செய்து வருகிறது.

இதுகுறித்து பேசிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித், "குழந்தை தற்போது நலமாக உள்ளது. அரசு தத்துவள மையத்தில் குழந்தைக்கு உரிய பராமரிப்பு கிடைக்கும். பெற்றோர்கள் யாரேனும் குழந்தையை விட்டுச் சென்றிருந்தால், அவர்கள் முன்வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். "வாழ்க்கை குறித்த சரியான புரிதல் இல்லாத சில இளம் வயதினர் தவறான பாதையில் சென்று விடுகின்றனர். பின்னர் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற படுபாதக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் எந்தத் தவறும் செய்யாத இந்த பச்சிளம் குழந்தைகள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகி, தங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாகக் கொண்டுள்ளனர்" என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம், அரசு சார்பில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், குடும்ப நலக் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளம் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனநல ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போலீஸார் தீவிர விசாரணை 

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார், என்ன காரணத்திற்காக குழந்தையைக் கைவிட்டனர் என்பது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சந்தேகப்படும் நபர்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் தாயாரைக் கண்டறிந்து, இந்த கொடூரச் செயலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் எதிர்காலம் குறித்த அக்கறையும், இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கான சமூகப் பொறுப்பும் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.