கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் கிராமத்தில் கம்பர் பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தஞ்சை கோட்ட ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும்! தமிழ் கம்பனும்!! என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னதாக தேரழந்தூரில் கம்பர் கோட்டத்தில் அமைந்துள்ள கம்பரின் முழு உருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கம்பரின் பெருமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து செயலாற்றி வரும் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். மாணவ, மாணவிகளின் கம்பராமாயணத்தின் பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறுகையில், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என உரக்க செல்லி தனது பேச்சை துவங்கிய ஆளுநர் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் பாரதம் முழுவதும் ராம மயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராமனின் அதிதீவிர பக்தர் ஆன கம்பன் பிறந்த மண்ணில் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன்.
பழமைவாய்ந்த தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. நமது அரசியல் அமைப்பு அடிநாதம் ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. நாம் ராம ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியமானது. ராமரை தெரிந்து கொள்ளும் வகையில் கம்பராமாயணத்தை முதலில் தமிழில் அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால் தான் பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது.
நம் பாரத தேசம் அரசியலமைப்புகளை தாங்கிய நாடு அல்ல, பாரதம் என்பது ஒரே குடும்பம் இங்கு பல்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதற்கு அடிப்படை ராமன்தான். ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்டுவது அவசியமாகிறது. பாரதத்தின் ஆன்மா ஸ்ரீராமர் என்றும் கம்பரின் புகழை உயர்த்திப் பிடிப்போம் என்றார்.
முன்னதாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் உள்ளிட்டோர் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கருப்பு கொடி காட்ட திரண்டனர். அவர்களை ஆளுநர் செல்லும் வழி இருந்து நூறு மீட்டர் தொலைவில் பேரிகாட் கொண்டு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் கவர்னரின் வாகனம் சாலையை கடக்கும் போது காவல்துறையினர் மீறி அவர்கள் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அதனைத் தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் கவர்னர் செல்லும் வழியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த அனைத்து முறையும் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.