ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியை தூய்மைப்படுத்தி தண்ணீர் திறந்து விட பக்தர்கள் வைத்த கோரிக்கை குறித்து ஏபிபிநாடு செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் தற்போது அப்பகுதியை தூய்மைப்படுத்தியுள்ளது.
ஆடிப்பெருக்கு விழா
"காவிரி பாய்ந்து ஓடி. விவசாயத்தை செழிக்க வைக்கும் காவிரி அன்னையை வரவேற்று காவிரி பாயும் அனைத்து பகுதிகளிலும் ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ம் தேதி இந்துக்கள் நீர்நிலைகளில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்து ஆடி பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரை, கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் மக்கள் திரள்வார்கள்.
காவிரி துலாக்கட்டம்
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், திருமண தம்பதிகள் காவிரி படித்துறையில் மங்கலப் பொருட்களை வைத்து படையல் இட்டும், புதுமணத் தம்பதியினர் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெறும். மேலும் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்ட காவிரி படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில், காமாட்சி விளக்கு, கண்ணாடி, வளையல், கருகமணி, தேங்காய், பழங்கள், மாவிளக்கு, காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையல் இட்டு ஏராளமான பெண்கள் வழிபாடு செய்வர்.
நம்பிக்கை
இந்த வழிபாட்டில் வேண்டுவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் புதுமண தம்பதியினர் அன்றைய தினத்தில் தங்களது தாலியை பிரித்து புது தாலியை அணிந்து கொள்வார்கள். காவிரி துலாக் கட்டத்தில் இரண்டு கரைகளிலும் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் படித்துறையில் பூஜை நடத்தி காவிரியை வழிபடு மேற்கொள்வார்கள். மேலும், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள காவிரித்தாய் சிலைக்கு மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துவரப்பட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டும்.
சிறப்புகள்
மேலும் மயிலாடுதுறை நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றின் துலாகட்டம் காசிக்கு நிகராக திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி பெருக்கு , அடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கை
இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில் புனித துலா கட்ட புஷ்கர தொட்டியில் ஆடி பெருக்கு விழாவை கொண்டாட மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரர் கூறுகையில், மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த பகுதியாகும். கங்கை தன் பாவத்தை போக்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதியில் வாசம் செய்வதாக ஐதீகம். அதனடிப்படையில் சிறப்பும் புண்ணியமுமிக்க பகுதியான மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகின்றோம்.
இந்நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்காகும். ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் இவ்வாண்டு காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவேரி வறண்டு கிடக்கிறது. காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் வழிபட முடியாத சூழல் இருந்த பொழுதிலும் தற்பொழுது கேரளா மற்றும் கர்நாடகத்தில் அதிக மழை பெய்வதால் ஓரளவிற்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
தூய்மைப்படுத்திய நகராட்சி நிர்வாகம்
அனைவராலும் கொண்டாடப்படவேண்டிய அற்புதமான திருநாளான ஆடிப் பெருக்கு வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி சனிக்கிழமை ஆடி பதினெட்டாம் நாள் நடைபெறுவதால் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்கள் குடும்பத்தினருடன் வந்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக துலாக்கட்ட காவேரி கரையை தூய்மைப்படுத்திடவும், தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கொண்டு வரவோ அல்லது துலாக்கட்ட காவிரிப் பகுதியில் உள்ள போர்வெல் வாயிலாக புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பி விழா சிறப்பாக நடைபெற தகுந்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆடி பெருக்கு விழாவை கொண்டாட பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டத்தை தூய்மை படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.