மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 3 வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 10 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


3 வது புத்தகத் திருவிழா 


மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3 ஆவது புத்தகத் திருவிழா ஜனவரி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை வரை மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.




பல்வேறு நிகழ்வுகள் 


இப்புத்தகத்திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 70 புத்தக விற்பனை அரங்குகள், அரசு துறைகளின் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், அறிவியல் கோலரங்கம் இடம்பெற உள்ளது. இப்புத்தகத்திருவிழாவில் புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும், கிராமியகலைக்குழுவினர்களின் நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. 




தொடங்கி வைத்த அமைச்சர் 


இந்த புத்தகத் திருவிழாவினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் (ஓய்வு) வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.


விழாவில் அமைச்சர் பேச்சு 


அதனைத் தொடர்ந்து திருவிழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்; தமிழ்நாடு முதலமைச்சர் 2006 -ல் துணை முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிலுள்ள 12,524 ஊராட்சிகளிலும் நூலகங்களை உருவாக்கினார். 2010 -ல் முன்னாள் முதல்வர் கலைஞர், பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே 2 வது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை சுமார் 6,47,000 புத்தகஙகளுடன் சென்னையில் நிறுவினார். இந்நூலகத்திற்கு 2023 - 2024 ஆண்டில் மட்டும் சுமார் 4 லட்சம் வாசகர்கள் வந்து சென்றுள்ளனர்.




அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா 


அதனடிப்படையில், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய நூலகத்தினை அமைத்துள்ளார். இந்த நூலகத்தில் இதுவரை சுமார் 9 லட்சம் வாசகர்கள் வந்து சென்றுள்ளனர். சென்னை மாநகரில் மட்டுமே புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், நமது முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெற்று, அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சியினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்.




நூலகவியலின் தந்தை எஸ்.அரங்கநாதன் பிறந்த மண்


மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த எஸ்.அரங்கநாதன் “நூலகவியலின் தந்தை“ எனப் போற்றப்படுகிறார். நல்ல புத்தகங்கள், நல்ல கனவுகளை வளர்க்கும். நல்ல கனவுகளை நல்ல எண்ணங்களை உண்டாக்கும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அதேபோன்று, ஒரு மனிதனை நல்லவனாக நெறிப்படுத்துவது புத்தகங்கள் மட்டுமே. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு புதிய நண்பனைப் பெறுவது போன்றதாகும். அப்படியான நூல்களை நாம் நிறைய வாங்கி படிக்க வேண்டும். அலைபேசியில் மூழ்கிக் கிடக்கும் நம் வாழ்வினை புத்தகங்களே நெறிப்படுத்தும். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் படிக்க முயற்சி செய்ய வேண்டும். மாணவச் செல்வங்களும், பொதுமக்களும் இந்த புத்தகத் திருவிழாவினைப் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நிறைய புத்தங்கள் வாங்கிட வேண்டும். “ கல்வியில் சிறந்த தமிழ்நாடு: புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு “ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, கல்வியால் மட்டுமே நாம் சாதிக்க முடியும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தனது பேச்சை நிறைவு செய்தார்.




மாவட்ட ஆட்சியர் பேச்சு 


இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி; தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 வது புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 65 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தேவையான புத்தகங்களும், வாசிப்பாளர்களுக்கான புத்தகங்களும் கிடைக்கின்ற வகையில் இப்புத்தகத் திருவிழாவானது மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.




இங்கு நூற்றுக்கணக்கான நூலகங்கள் போல் இப்புத்தகத் திருவிழா துவக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி - நம் அறிவை - ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது நமது கடமை. வீட்டில் உள்ள பெற்றோர்களும், பெரியோர்களும், பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் - பேராசிரியர் பெருமக்களும் தவறாது இப்புத்தகத் திருவிழாவிற்கு வர வேண்டும். எத்தனை எத்தனை வகையான நூல்கள் இருக்கின்றன என்பதனை கண்டு களிக்க வேண்டும். வாங்கி படிக்க வேண்டும், இளைய தலைமுறையினரை, மாணவச் செல்வங்களை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கு புத்தகத்தின் பால் - வாசிப்பின் பால் ஆசையை தூண்ட வேண்டும். புத்தகம் படிப்பதால் வாசிப்பு மனதை தெளிவுபடுத்தும், அறிவை விரிவுபடுத்தும், ஆற்றலை மேலோங்கச் செய்யும். தெளிவான சிந்தனையை கொடுக்கும். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.