தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய நிலையில் ஆரம்பத்தில் குறைவாக பெய்து வந்தது. அதேநேரம், கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கனமழை:
இச்சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில், “ தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை, திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது” என்று கூறியிருந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இன்று முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிறுத்தப்பட்டிருந்தது.
இச்சூழலில் தான், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 14) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Rain Alert: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மேலும் படிக்க: Southern Railway: பயணிகளே! டிசம்பர் மாதத்தில் மதுரை வழியாக கோவாவிற்கு சுற்றுலா ரயில்!