INDIA Semi Final World Cup 2023: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு எப்படி தகுதிபெற்றது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகக் கோப்பை:
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கொண்டாட் வருகின்றனர். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு என்ற கூடுதல் பலத்துடன் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 45 போட்டிகள் அடங்கிய லீக் சுற்றின் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து வரும் 15ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
இந்தியா பேட்ஸ்மேன்கள் அபார ஆட்டம்:
நடப்பு உலகக் கோப்பையில் எந்தவொரு தனி நபரையும் சார்ந்து இருக்காமல், இந்தியா ஒட்டுமொத்த அணியாகவே சிறப்பாக செயல்பட்டது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் அணிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். ஒட்டுமொத்தமாக 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 500 ரன்களை கடந்துள்ளார். அவரை தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரரான கோலி, இரண்டு சதங்கள் உட்பட 594 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர்களை தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆன, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் தேவையான நேரத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தலா ஒரு சதமும் விளாசியுள்ளனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் பினிஷிங் டச்சில் அசத்துகின்றனர்.
பந்துவீச்சில் இந்தியா அதகளம்:
வழக்கமாக இந்திய அணிய்ன் பலம் என்பது பேட்டிங்காக தான் இருக்கும். ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங்கை காட்டிலும், பவுலிங்கில் இந்திய வீரர்கள் கவனம் ஈர்த்தனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களே, ஸ்விங் செய்ய முடியாமல் தவித்த மைதானங்களில் இந்திய வீரர்கள் அதகளம் செய்தனர். பும்ரா, ஷமி, சிராஜ் வேகப்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டி, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் குழம்பவிட்டு விக்கெட்டுகளை பறித்தனர். இதே பேட்டிங் மற்றும் பவுலிங் நியூசிலாந்து அணிக்கு எதிரான, அரையிறுதிப் போட்டியிலும் வெளிப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
லீக் சுற்றில் இந்திய அணியின் செயல்பாடு:
- முதல் போட்டி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - கே.எல். ராகுல்
- இரண்டாவது போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - ரோகித் சர்மா
- மூன்றாவது போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - பும்ரா
- நான்காவது போட்டி: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 257 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - விராட் கோலி
- ஐந்தாவது போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 274 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - முகமது ஷமி
- ஆறாவது போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்களை சேர்த்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - ரோகித் சர்மா
- ஏழாவது போட்டி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை குவித்து, 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - ஷமி
- எட்டாவது போட்டி: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்களை குவித்து, 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - விராட் கோலி
- ஒன்பதாவது போட்டி: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்களை குவித்து, 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் - ஸ்ரேயாஸ் அய்யர்