பாலிவுட், கோலிவுட் என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை திரட்டிய சிறப்பான நடிகை. நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் மணிஷா கொய்ராலா. தமிழில் கமல், ரஜினி என எல்லோரோடும் ஜோடி போட்டு வலம் வந்தார்.
மணிஷா கொய்ராலா:
இந்நிலையில் உடல்நலக் குறைவால் இடையில் திரைவாழ்வில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று ரவுண்டு கட்டிவரும் மணிஷா ஹீராமண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது.
இதனை ஒட்டி மனிஷா கொய்ராலா ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பளிச்செனப் பேசியுள்ளார்.
என் திரைவாழ்வில் 1942: ஏ லவ் ஸ்டோரி, பாம்பே, கம்பெனி போன்ற திரைப்படங்கள் திருப்புமுனைகளாக இருந்தன. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நான் நடித்துள்ள ஹீராமண்டி பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.
வேண்டாம் என்பதே வெற்றி:
என்னைப் பொருத்தவரையில் வெற்றி என்பது நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதை எந்த நேரத்திலும் சுதந்திரமாக செய்ய வேண்டும். அந்த சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இப்போது நான் நினைத்தால் இது வேண்டாம் என்று சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. என் ஆரம்ப நாட்களில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கேலண்டரில் அடுத்த மூன்று வருடங்களுக்காவது புக் ஆகி பிஸியாக இருந்தால் தான் பிரபலமான நடிகையாக அறியப்படுவேன் என்று கூறினார்கள்.
நானும் அப்படித்தான் பிஸியாக இருந்தேன். ஆனால் அந்த பரபரப்புக்காக நான் செய்த படங்களில் சில மோசமானவை. அவற்றில் நடித்ததற்குப் பதிலாக நான் நடிக்காமலேயே இருந்திருக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தாருடனோ அல்லது எனக்கு பிரியமானவர்களுடனோ அல்லது எனக்கே எனக்காகவோ செலவிட்டிருக்கலாம். இப்போது நான் அப்படியில்லை. என்னால் இது வேண்டாம் என்று நிராகரிக்க முடிகிறது. அதுதான் வெற்றி எனக் கருதுகிறேன். அதுதான் சொகுசு என்றும் புரிந்து கொள்கிறேன்.
மேஸ்ட்ரோ:
எனக்கு நடிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தமான நடிப்பை எனக்கு பிடித்தமான களத்தில் பிடித்தமான வேளையில் என்னால் செய்ய முடிகிறது. சஞ்சய் லீலா பன்சாலி ஒரு மேஸ்ட்ரோ. அவருடன் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் மீண்டும் இணையப் போகிறேன்.
சஞ்சய் உடன் நான் காமோஷி படத்தில் பணியாற்றினேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இப்போது இணைகிறேன். எங்களுக்குள் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது எனக்கு ஆழமான மரியாதை உள்ளது. எங்கள் நட்பு பணியைத் தாண்டியது. அவருடைய பணி முறையை யாரும் சமன் செய்ய முடியாது. படத்துக்கு படம் அவர் தன்னையே மெருகேற்றிக் கொள்பவர்.
ஆணாதிக்கம்:
திரைத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது. அதனால் நடிகைகளுக்கு தங்களை நிரூபிக்க குறைந்த அளவிலான வாய்ப்புதான் இருக்கும். ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு விதிவிலக்கு. அவர் படத்தில் நடிப்பது என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அவரால் மட்டுமே பெண்களை வைத்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும். அவருடைய கங்குபாய் கத்தியாவாடி பார்த்து நான் மிரண்டு போனேன்.
இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிஷா கொய்ராலா லஸ்ட் ஸ்டோரீஸ், சஞ்சு, சேஷாபாத் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
'கங்குபாய் கத்யாவாடி' படத்துக்குப் பிறகு பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் ‘ஹீராமண்டி’. நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் இத்தொடர் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் உருவாகி வருகிறது. இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சுந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அதிகம் அறியப்படாத பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக உள்ளது.