கொரோனா ஊரடங்கு காலத்திலும் அதற்கு பிறகான காலத்திலும், சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழிக் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்தன. கடந்த 2019ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 385 ஆக பதிவான குற்றங்கள், 2020ஆம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 ஆக அதிகரித்தன. 


இந்தியாவை அலறவிடும் சைபர் குற்றங்கள்:


இந்தியாவில் கொரோனா பொது முடக்கக் காலமான 2020ஆம் ஆண்டு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் 385 சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன.


கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு நவம்பர் இடையிலான காலகட்டத்தில் 1,125 சைபர் குற்ற சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டு 12,317 குற்றங்களும், 2017ஆம் ஆண்டு 21,796 குற்றங்களும், 2018ஆம் ஆண்டு 27,248 குற்றங்களும், 2019ஆம் ஆண்டு 44,735 குற்றங்களும், 2020ஆம் ஆண்டு 50,035 குற்றங்களும் பதிவானது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.


புதுமையான தொழில்நுட்பம்:


இந்நிலையில், சைபர் குற்றங்களை களைய புதுமையான தொழில்நுட்ப கருவி ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு துறை வடிவமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிம் கார்ட் பயன்படுத்துவோரை சரிபார்க்க இந்த கருவி உதவும். அதன்படி, பொய்யான மொபைல் இணைப்புகளை பயன்படுத்த சைபர் குற்றத்தில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியும்.


தமிழ்நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட சட்ட விரோத மொபைல் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பது தொலைத்தொடர்பு துறை வடிவமைத்த ASTR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து இணைப்புகளையும் ஆய்வு செய்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை, சட்ட விரோத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. 


காவல்துறை நடவடிக்கை:


இதுபோன்ற இணைப்புகளின் விவரங்கள் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சைபர் குற்றம் உள்ளிட்ட சட்ட விரோதங்கள் செயல்கள் தடுக்கப்படும்.


இணையம் தொடர்பான குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த 2016இல் 144 குற்றங்களும், 2017இல் 228 குற்றங்களும், 2018இல் 295 குற்றங்களும், 2019இல் 385 குற்றங்களும், 2020இல் 782 குற்றங்களும் பதிவாகியுள்ளன.


இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் அதிகளவு சைபர் குற்றங்கள் நடைபெற்ற முதல் 5 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.