திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறுவடை பணிகள் தீவிரமாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதனை அடுத்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வேளாண்துறை அதிகாரிகள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வந்தனர்.



 

அதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைத்து டெல்டா மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் நேரடியாக வந்து கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனை அடுத்து அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்திருந்தது. அதனை அடுத்து தமிழக முதல்வர் குறுவை நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. அதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.



 

இந்த நிலையில் திருவாரூர் அருகே பின்னவாசல் கிராமத்தில் இந்த ஆண்டு சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி நெல் பயிர் மழையால் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி போலியான சான்று வழங்கி வருவதாக அந்தப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி இன்று திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் பின்னவாசல் கடைவீதியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு போலியான சான்று வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் வட்டாட்சியர் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்ஷிமா மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலியாக கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.