கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு இந்தாண்டு மதுரையில் வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற்றது. உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று முடிந்தது.




இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15-ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் சித்திரைத் திருவிழாவில் மக்கள் மனதை மகிழ்விக்கும் பொருட்காட்சி நிகழ்ச்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெறாமல் போனது சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.






45 கோடி ரூபாய் மதிப்பில் தமுக்கம் மைதானத்தில் வர்த்தக மையம் கட்டப்பட்டதால் அங்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது அதற்காக மாற்று ஏற்பாடாக சென்னையில் இருந்து வந்த குழுவினர் மாட்டுத்தாவணி, பாண்டிக் கோவில், மூன்று மாடி உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி துவங்கி நடைபெற்று நிலையில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் தற்போது மீண்டும் தமுக்கம் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது, இன்னும் ஒரு வார காலத்துக்குள் பணிகள் முடிந்தவுடன்  பொருட்காட்சி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

“சித்திரைத் திருவிழாவில் கிராம மக்கள் விரும்பும் நிகழ்வில் பொருட்காட்சி, மிகவும் முக்கியமானது. இதனை சித்திரைத் திருவிழாவின்போது தமுக்கத்தில் நடத்தினால் தான் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள். மற்ற இடங்களில் நடத்துவது அவ்வளவு சிறப்பாக அமையாது என” மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.