தேனி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே மகள் உயிரிழந்ததாகவும், உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக் கோரியும், அவரது தாய் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்
வழக்கு:
தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கனிமொழிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்ற அவரை ஜூன் 8-ம் தேதி பிரசவத்திற்காக ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர். மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21 ஆம் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர்.
உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை:
இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யவும், மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
அறிக்கையை ஒப்படைக்க உத்தரவு:
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து நீதிபதி, உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை மனுதாரர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து மற்றுமொரு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
மாடுகள் சாலைகளில் திரிவதாக வழக்கு:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சுற்றிலும் தனியார் மற்றும் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பல்வேறு கோயில்கள் உள்ளன. இங்குள்ள கோயில்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக பசு மற்றும் காளை மாடுகளை கோயிலுக்கு தானமாக வழங்குகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் மாடுகளை கோயில் நிர்வாகமும் மற்றும் அதிகாரிகளினால் பராமரிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிப்பு இன்றி திருப்புவனம் பகுதியில் உள்ள சாலைகளில் சாலையில் சுற்றித் திரிகின்றனர்.
விபத்து
இதனால் திருப்புவனம் நான்கு வழி சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் மற்றும் பல மாடுகள் சாலை விபத்தில் இறப்பது தொடர்கிறது. இது தொடர்பாக திருப்புவனம் பேரூராட்சி அதிகாரியிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் மாடுகள் சாலையில் சுற்றித் தெரியாமல் பராமரிப்பதற்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பேரூராட்சி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
அப்போது நீதிபதிகள், மாடுகள் நேர்த்திக்கடனாக பெறப்பட்டால் கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால், கோயில் இடங்கள் பிளாட் போட்டு விற்று விட்டால் எவ்வாறு இடம் இருக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிக்க இடமில்லை என்றால் கோயிலின் வெளியே மாடுகள் பெறப்படாது என பலகை வைக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் கோயில்களில் நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகள் பராமரிப்பது குறித்து தீர்வுகள் என்ன என்பதை திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.