தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை, உரிய அனுமதி பெற்று தொடரலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

வழக்கு:

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்  எஸ்.பி.முத்துராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.119 கோடி மதிப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 6 மாடியில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகமாகும் வகையில் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். எனவே, சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியின்றி தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் கட்டடத்தை கட்டும் பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

விசாரணை:

 

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "  சுற்றுச்சூழல் துறையிடம் வரைபட அனுமதி உள்பட உரிய அனுமதி பெறாமலேயே மாவட்ட ஆட்சியர் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டார். அரசு தரப்பில், "சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுமான பணிகளை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

 

அதற்கு நீதிபதிகள், "நீதிமன்றம் உள்ளிட்ட எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது அவசியம். எனவே, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும் வரை, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற கூடாது. இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உரிய அனுமதி பெற்ற பின் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என உத்தரவிட்டனர்.



 

இதை தொடர்ந்து மற்றுமொரு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

 

விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கு:

 





வழக்கு:

 

விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட கோரி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்  உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடடு செய்துள்ள வழக்கில், உடனடியாக எந்த உத்தரவும்  பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

விசாரணை:



தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  மதுரைக் கிளை நீதிபதிகள் P.N.பிரகாஷ்  மற்றும் ஹேமலதா அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.உயர்நீதிமன்றம்  மதுரைக் கிளைக்கு  உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி பல்வேறு வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கில் சேர்க்கும் அதிகாரிகளின் அடிப்படையில்,  மதுரை கிளையில் வெவ்வேறு நீதிபதிகளிடம் விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது.

 

உத்தரவு:

 

இதனால் ஒரே மாதிரியான வழக்குகளுக்கு  வெவ்வேறு  உத்தரவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு தேவையற்ற நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இவை, தொடர்பான வழக்குகளை ஒரே நீதிபதியிடம் பட்டியலிட  உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உடனடியாக தற்போது  எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும்  என்று தெரிவித்தனர்.