ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த வண்ணாங்குண்டு அருகே கொடைக்கான்வலசை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மனைவி பூமாதேவி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர் கர்ப்பிணியாக உள்ளார். ராஜேந்திரனுடைய  அண்ணன் 'செல்வம்' வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி 'சத்யா'. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ராஜேந்திரன் தனது அண்ணி  சத்யாவிற்கு விவசாய வேலை, வீட்டு வேலை என அனைத்து பணிகளிலும்  உதவியாக இருந்து வந்தார். இதனால், நாளடைவில் அவர்களுக்குள் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் பல நாட்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இவர்களின் விசயம் வெளிச்சத்திற்கு வரவே, உறவினர்களும் ஊரில் உள்ளவர்களும்  கண்டித்துள்ளனர். இதனால் மனம் திருந்திய ராஜேந்திரன்  அண்ணியுடன் இருந்த தவறான உறவை துண்டித்துவிட்டார்.



இந்த  நிலையில், சத்யாவுக்கு ஏர்வாடியை சேர்ந்த ஒரு சிலருடன் பழகி சந்தோசமாக இருந்துள்ளார். ஆனால், இவர்களின் கள்ளக்காதலை அறிந்த ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் சத்யாவுக்கும், ராஜேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் 'நீயும் ஒத்து வரமாட்டேங்குற என் இஷ்டத்துக்கும் போக விட மாட்டேங்குற' என சண்டை போட்டுள்ளார். ஆனால் கொழுந்தன் ராஜேந்திரன், நானும் தப்பு பன்ன மாட்டேன், உன்னையும் தப்பு செய்ய விடமாட்டேன் என உறுதியாக இருந்துள்ளார். இதனால், ஒரு சமயத்தில் உயிராய் நினைத்த கொழுந்தனின்  உயிரை எடுக்க துணிந்து விட்டார் சத்யா.



இதனை தன்னுடன் தற்போது ஆசை நாயகனாக இருப்பவரிடம் தெரிவித்த சத்யா, முன் கூட்டியே ஒரு இடத்தில் அவரை மறைவாக இருக்கச் சொல்லிவிட்டு, நேற்று இரவு சத்யா ராமநாதபுரத்தில் ஒருவரிடம் இருந்து பணம் வாங்குவதற்காக ராஜேந்திரனை உடன்  அழைத்துள்ளார். ராஜேந்திரனும் டூவீலரில் சத்யாவை அழைத்து வந்து விட்டு இரவு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது டூவீலரை நிறுத்த சொல்லி அதிலிருந்து  இறங்கிய சத்யா அலைபேசியில் சற்று தள்ளி நின்று பேசுவது போல் பாசாங்கு செய்துள்ளார். அந்த சமயம் பார்த்து அங்கு இருட்டில் மறைந்திருந்த இருவர் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜேந்திரன் அங்கேயே உயிரிழந்து போனார். இச்சம்பவம் குறித்து கேணிக்கரை துணை ஆய்வாளர் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.  கொழுந்தனை கொலை செய்துவிட்டு யாரோ இருவர் தப்பிச்சென்று விட்டதாக சத்யா போலீசில் சொல்லியுள்ளார்.



ஆனால், போலீசார் நடத்திய தொடர்  விசாரணையில் தன்னிடம் ஏற்கனவே கொடுத்த  பணத்தை  கேட்டும், கள்ளக்காதலுக்கு இடையூறாகவும்  இருந்த கொழுந்தன்  ராஜேந்திரனை திட்டமிட்டு கள்ளக்காதலனை வரவழைத்து சத்யா தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்தனர். கள்ளக்காதலன் மற்றும் அவருடன் வந்தவரை தேடி வருகின்றனர்.