திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த தருண் என்ற மாணவன் தனியார் பள்ளியில் 2017ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளான், அப்போது தலை முடி அதிகமாக இருந்ததாகவும், காதில் கம்மல் அணிந்து இருந்ததனால் ஆசிரியை ஒருவர் கண்டித்து  முடியை பள்ளியிலேயே வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனின் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஆசிரியை மாணவனின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டதாக  கூறப்படுகிறது.



இதனையடுத்து மாணவன் தருண் அதே பள்ளியில் இந்த வருடம்  12ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில்  முடியை வெட்டிய ஆசிரியை வகுப்பு ஆசிரியராக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியரின் பெயரை கொண்டு  இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு உருவாக்கி ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக  சித்தரித்து கடந்த மாதம் போஸ்ட் செய்துள்ளார்.



இந்த  இன்ஸ்டாகிராம்  போலி கணக்கில்  வயது குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்ததால்  சைபர் கிரைம் போலீசார் இதனை கண்டறிந்து இந்த போலி கணக்கினை முடக்கியுள்ளனர், அதனை தொடர்ந்து மீண்டும் ஆசிரியையின்  பெயரில் போலி இன்ஸ்ட்ராகிராம் கணக்கு  உருவாக்கப்பட்டு சித்தரிக்கப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் மீண்டும் பதிவிட்டதாகவும், ஆசிரியை  மற்றும் ஆசிரியையின் கணவருக்கு மாணவன் தனது செல் நம்பரில் இருந்து வாட்ஸ் அப் மூலம் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார்.



அதனை தொடர்ந்து ஆசிரியைக்கு  மன உளைச்சல் ஏற்பட்டதால் ஆசிரியையின்  கணவர் சைபர் கிரைம் போலீசாருக்கு கடந்த 5 தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சென்னையில் இருந்த வந்த சைபர் கிரைம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்  விசாரணையில் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம்  பதிவிட்டது மாணவன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது,



இதனையடுத்து மாணவனின் பெற்றோர் ஆசிரியை மற்றும் ஆசிரியையின்  உறவினரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டதால் புகார் மனு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆசிரியரின் புகைப்படம் மீண்டும் பரவியதையடுத்து மன உளைச்சல் ஏற்பட்ட ஆசிரியை  கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் இன்று  புகார் அளித்தார், அதனை தொடர்ந்து மாணவன் மீது 294(b),354 A,506(2),67A உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனை அறிந்த மாணவன் தலைமறைவாகியுள்ளதாக  மகளிர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மாணவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இச்சம்பவம்  கொடைக்கானல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*