விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகளை பொது வெளியில் வைத்து வழிபாடு நடத்தப்படும். பின் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. சின்னமனூர் முத்தாலம்மன் கோயில் அருகே இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 அங்குலம் முதல் 3 அடி வரை தற்போது பல்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில், சிங்கம் மேல் அமர்ந்த விநாயகர், பார்வதி, சிவன் முகங்களை பக்கவாட்டில் கொண்ட விநாயகர், காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு விநாயகர், ஆஞ்சநேயர் விநாயகர் என்று வித்தியாசமான உருவங்களுடன் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.




கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால்,  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டன. 
கடந்த ஆண்டு, அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சிலைகள்  உற்பத்தி செய்த இடங்களிலேயே விற்பனையாகாமல் தேங்கின. அதேபோன்று இந்த ஆண்டிலும் விநாயகர் சிலை செய்யும் சிற்பிகள் விநாயகர் சதுர்த்தி எதிர்பார்த்து சிலைகள் செய்ய தொடங்கினர். விநாயகர் சதுர்த்தியன்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை தற்போது வரை முழுமையாக விற்கப்படாத நிலையில் உள்ளது. தேனி மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான சிலைகள் தேக்கம் அடைந்தன. தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை விற்கும் முயற்சியில், புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர் சிலை சிற்பிகளான கண்ணன் மற்றும் குமார் ஆகியோர்.




தேனி மாவட்டம் சின்னமனூரில் வசிக்கும் கண்ணன் மற்றும் குமார் என்ற சிலை செய்யும் சிற்பிகள் விநாயகர் சதுர்த்திக்காக களிமண்ணில் சிலைகளை பல்வேறு வடிவங்களில் தயார் செய்து வருகின்றனர். இவற்றை வீடியோ அழைப்பில் பார்த்து தேர்வு செய்ததும், வீட்டுக்கே நேரடியாக வந்து ஒப்படைக்கின்றனர். கலைநயம் மிக்க சிலைகளை வீட்டில் இருந்தபடியே கொள்முதல் செய்யும் விற்பனை யுக்தி பலரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ள நிலையில்,   சிலை வாங்க பொது இடங்களில் அலைவதைத் தடுக்க ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.  இந்த சிலை சிற்பிகள். இதற்காக 9788942141 என்ற எண்ணில் தொடர்புகொண்டு வீடியோ அழைப்பில் சிலைகளை பார்க்கலாம். பிடித்த சிலைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பின்பு டோர் டெலிவரி மூலம் இவை ஒப்படைக்கப்படும் என்கின்றனர் சிலை சிற்பிகள்.




இது குறித்து சிலை வடிவமைப்பாளர்கள் கண்ணன், குமார் ஆகியோர் கூறுகையில், பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமான சிலைகளை வடிவமைத்துள்ளோம். இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஆன்லைன் மூலம் பார்த்து வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சிலைகளை வாங்கலாம். சிலை களை நேரடியாக ஒப்படைக்க குறைந்தபட்சம் 20 ரூபாய் சேவைக் கட்டணம் பெறுகிறோம். தூரத்துக்கு ஏற்ப இத்தொகை மாறுபடும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு களிமண், நெல், தேங்காய் நார் போன்றவற்றினால் சிலைகள் உருவாக்கப்படுகின்றன என்றனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 


https://bit.ly/2TMX27X*


 


விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்...!