திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கிற 38 வயது பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ரத்தம் சொட்ட, சொட்ட வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் வந்தார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடி வந்த அவரை கண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.




குங்குமத்தை வைத்து நாடகம்:


பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து தன்னை தாக்கி விட்டார்கள் என்றும், இதனால் ரத்தம் கொட்டுவதாகவும் குண்டை தூக்கி போட்டார். இதனால் பதறி போன மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தலையில் எந்த இடத்திலும் காயம் இல்லை. அப்படி இருந்தும் தலையில் ரத்தம் கொட்டியதற்கான காரணம் தெரியாமல் ஊழியர்கள் திகைத்தனர்.




அதன்பிறகு தான் அவரது தலையில் ரத்தம் கொட்டவில்லை என்றும், குங்குமத்தை தண்ணீரில் கலந்து தனக்கு தானே தலையில் தேய்த்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வேடசந்தூர்  காவல் நிலையத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அந்த பெண், தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த புகார் மனுவை கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.




நாடகம்:


வேடசந்தூர் அருகே உள்ள முத்துபழனியூர் அந்த பெண்ணின் சொந்த ஊர் ஆகும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர், வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் குடியிருந்தார். அவருடன் 50 வயது ஆண் ஒருவர் வசிக்கிறார். இவர்கள் 2 பேரும் கணவன்-மனைவி இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்டித்து வந்தனர்.


அதன்படி நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், பக்கத்து வீட்டுக்காரர்களை போலீசில் சிக்க வைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். அதாவது குங்குமத்தை தண்ணீரில் கலந்து தனது தலையில் அந்த பெண் தேய்த்தார். பின்னர் ரத்தம் சொட்டுவதை போல, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கதறியபடி ஓடி வந்தார்.



பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை தாக்கியதாக ஊழியர்களிடம் தெரிவித்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவரது  நாடகம் வெளியானது.  அரசு மருத்துவமனை என்பதால் கண்டு கொள்ளாமல் கட்டு போட்டு படுக்கையில் படுக்க வைத்து விடுவார்கள் என்று கருதி இங்கு வந்ததாகவும், ஆனால் சோதனை செய்து தன்னை கண்டுபிடித்து விட்டார்கள் என்றும் அந்த பெண் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இனிவருங்காலத்தில் இதுபோன்று நாடகம் ஆடினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களை போலீசில் சிக்க வைக்க குங்குமத்தை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.