"இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அடுத்த நீர்கோழியேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்பவரின் மரணத்தை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன.” என  மணிகண்டன் மரண விவகாரத்தில், முதுகுளத்தூர் பகுதி மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டார். இந்நிலையில்  முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்து., காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக ஆதரமற்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என  ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் பேட்டியளித்துள்ளார்.


இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



”மணிகண்டன் விஷம் அருந்தியுள்ளார்.. விஷபாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது” -  ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் திட்டவட்டம்


மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம், ”இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் ஓட்டிவந்த பைக் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு விசாரணை முடிந்து வீட்டிற்கு அவரது தாயுடன் அனுப்பபட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி மணிகண்டனின் உடல்கூராய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளோம். 




 

உடற்கூராய்வு முடிவில் மணிகண்டனின் உடலில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் அருந்திய விஷத்தின் பாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இளைஞரின் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரியமால் தகவல்களை பதிவிடவேண்டாம்” என தெரிவித்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.


"தங்களின் குடும்பத்தை கூட கவனிக்காமல், இரவு பகல் பாராது உண்மையாக உழைத்து வரும் காவல் துறையின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வண்ணம் சிலர் செயல்பட்டு இந்த விஷயத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்த விஷயத்தை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஒரு சில யூகங்களின்  அடிப்படையில் பேசுவது சரியன்று. இந்த மரணத்தை குறித்து முழுமையான நீதி விசாரணை நடந்து வருவதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என காவல் ஆய்வாளர் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்த நிலையில் ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன்  தற்போது மதுரையில் பேட்டியளித்துள்ளார்.